Operation Sindoor.. லாய்டரிங் வெடிமருந்து என்றால் என்ன?.. முதல் முறையாக பயன்படுத்திய இந்தியா!

Manjula Devi
May 07, 2025,10:55 AM IST

டெல்லி:  ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முக்கிய அம்சமாக இந்திய கடற்படை முதல் முறையாக லாய்டரிங் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்ததில் இந்த வெடிகுண்டுகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.


பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளும் இணைந்து பயங்கரவாத முகாம்களை அழித்தன. துல்லியமான தாக்குதல் நடத்த இந்தியா லாய்டரிங் வெடிமருந்துகளை பயன்படுத்தியது. இதன் மூலம் பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து அழிக்க முடிந்தது.


மிகவும் ஒருங்கிணைப்புடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய உளவு அமைப்புகள் இந்த தாக்குதலுக்கான தேவையான தகவல்களையும், விவரங்களையும் வழங்கின. இதனால் இந்திய மண்ணில் இருந்தே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. ஆபரேஷன் சிந்துர் குறித்த நேரடி தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 


இந்திய விமானப்படை நடத்திய இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் நான்கு முகாம்கள், லஷ்கர்-இ-தொய்பாவின் மூன்று பயிற்சி மையங்கள், ஹிஸ்புல் முஜாஹிதீனின் இரண்டு மறைவிடங்கள் அழிக்கப்பட்டன.


லாய்டரிங் வெடிமருந்து என்றால் என்ன? 




லாய்டரிங் வெடிமருந்து என்பது ஒரு வகை drone ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வரை வானில் வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். இலக்கு கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் அதை தாக்கி அழித்துவிடும். இதை தற்கொலை drone என்றும் அழைக்கலாம்.

இந்த வெடிமருந்துகளை மனிதர்கள் இயக்கலாம் அல்லது தானியங்கியாகவும் செயல்பட வைக்கலாம்.


லாய்டரிங் வெடிமருந்துகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும். மறைந்திருக்கும் இலக்குகளை தாக்குவதற்கு இது மிகவும் ஏற்றது. ஏனென்றால் இலக்குகள் எப்போது வெளியே வரும் என்று தெரியாது. மற்ற வெடிமருந்துகளைப் போல இல்லாமல், லாய்டரிங் வெடிமருந்துகளை நடு வழியில் இலக்கை மாற்றவோ அல்லது தாக்குதலை நிறுத்தவோ முடியும்.


பொதுவாக லாய்டரிங் வெடிமருந்துகள் விமானம் மூலமாக வீசப்படுவது வழக்கம். ஆனால் கடலுக்கு அடியிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இதை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.  


அப்பாவி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நமது இலக்கை மட்டும் குறி வைத்துத் தாக்க இந்த லாய்டரிங் வெடிமருந்து பயன்படுகிறது. பாகிஸ்தான் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தீவிரவாதிகளுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தியப் படைகள் இந்த வகை வெடிமருந்துகளை பயன்படுத்தியுள்ளன.