பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
டெல்லி: ஜூலை 9-ம் தேதி அதாவது, நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம் (பாரத் பந்த்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர் அமைப்புகள் இணைந்து இந்த பந்த்தை நடத்துகின்றன.
மத்திய அரசின் கொள்கைகள் தொழிலாளர்களுக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இதனால், ஜூலை 9-ம் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெறும் என்று அறிவித்துள்ளன. இந்த பந்த்தில் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு 10 தேசிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அவை பின்வருமாறு:
- இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC)
- அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)
- ஹிந்த் மஸ்தூர் சபா (HMS)
- இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU)
- அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் (AIUTUC)
- தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC)
- சுய தொழில் பெண்கள் சங்கம் (SEWA)
- அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (AICCTU)
- தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு (LPF)
- ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் (UTUC)
எந்த துறைகள் பாதிக்கப்படும்?
இந்த வேலை நிறுத்தத்தால் பல துறைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி மற்றும் நிதி சேவைகள், தபால் சேவைகள், நிலக்கரி சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகள், அரசு போக்குவரத்து சேவைகள், பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும்
அரசாங்க துறைகள் ஆகியவற்றில் பாதிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், வங்கி ஊழியர்கள் தனியாக வேலைநிறுத்த அறிவிப்பு எதுவும் கொடுக்கவில்லை. ஆனால், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இந்த பந்த்தில் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வங்கி கிளைகளின் செயல்பாடுகள், காசோலை பரிமாற்றம் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற பணிகள் சில இடங்களில் பாதிக்கப்படலாம்.
என்ன திறந்திருக்கும், என்ன மூடியிருக்கும்?
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பொதுவாக திறந்திருக்கும். ஆனால், போக்குவரத்து இடையூறுகளால் சில இடங்களில் பாதிப்பு ஏற்படலாம். தனியார் அலுவலகங்கள்: திறந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஊழியர்கள் வேலைக்கு வருவது போக்குவரத்து பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். அரசு பேருந்துகள், டாக்சிகள் மற்றும் app-based cabs சேவைகள் போராட்டம் காரணமாக பாதிக்கப்படலாம். பல நகரங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்வே தொழிற்சங்கங்கள் சாதாரணமாக ஆக வேலைநிறுத்தம் செய்வதில்லை. ஆனால், ரயில் நிலையங்கள் அருகே போராட்டங்கள் நடந்தால் ரயில் சேவைகள் தாமதமாகலாம்.
ஏன் இந்த வேலை நிறுத்தம்?
தொழிலாளர்களின் கஷ்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த வருடம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 17 அம்ச கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் கொடுத்தன. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.
தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்:
- கடந்த பத்து வருடங்களில் இந்திய தொழிலாளர் மாநாடு (Indian Labour Conference) எதுவும் நடத்தப்படவில்லை.
- நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை (labour codes) கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். இது தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தும் மற்றும் வேலை நேரத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
- ஒப்பந்த வேலைகளை (contractual jobs) அதிகப்படுத்துவது மற்றும் தனியார்மயமாக்குவது.
- பொதுத்துறை வேலைவாய்ப்புகளை (public sector hiring) குறைப்பது மற்றும் சம்பள உயர்வு (wage hikes) வழங்காதது.
- வேலையில்லா திண்டாட்டம் (unemployment) மற்றும் தொழிலாளர் பாதுகாப்பில் (worker protections) கவனம் செலுத்தாதது.
விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் ஆதரவு
சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் பிற கிராமப்புற தொழிலாளர் அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் கஷ்டங்களை எதிர்த்து போராட மக்களை திரட்டி வருகின்றனர்.