நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
தேனி : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்திாயளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் ஒருங்கிணைய நான் தயாராகவே உள்ளேன். அவருடைய அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாராக இருக்கிறாரா என்று ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக கேட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற குழுவை துவக்கினார். தொடர்ந்து அதிமுக கட்சியையும், அதன் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்ற பல கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்து வந்தார். இருந்தும் தொடர்ந்து அவரது முயற்சிகளில் பின்னடைவையே சந்தித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி துவங்க போவதாக சொல்லி வந்தார். பிறகு தனிக்கட்சி துவங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றார்.
அதிமுக.,வில் மீண்டும் ஓபிஎஸ்.,க்கு இடம் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறி விட்டதால், என்டிஏ கூட்டணியிலாவது இணைந்து, சீட் வாங்கி, தேர்தலில் போட்டியிடலாம் என பலவிதமான அரசியல் கணக்கு போட்டு, அதற்கான முயற்சிகளிலும் ஓபிஎஸ் ஈடுபட்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்.,ஐ கூட்டணியில் கூட சேர்க்கக் கூடாது என சொல்லி விட்டதால், பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்தவர்களை சந்திக்க மறுத்து விட்டனர்.
தேர்தல் வேறு நெருங்குகிறது. இனியும் ஓபிஎஸ்.,ஐ நம்பி அவருடன் இருந்தால் நம்முடைய அரசியல் எதிர்காலமும் வீணாகி விடும் என நினைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த வைத்தியலிங்கம், தர்மர் உள்ளிட்ட பலரும் திமுக மற்றும் அதிமுக.,வில் சென்று இணைந்து கொண்டார்கள். திமுக கூட்டணியில் தனக்கான சீட்டையும் உறுதி செய்து விட்டார் வைத்தியலிங்கம். அதே போல் தர்மரும் அதிமுக.,வில் இணைந்து விட்டார். இப்போது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு முக்கிய நபர்கள் என ஓபிஎஸ் வசம் எவரும் இல்லை.
தனது ஆதரவாளர்கள் பலரும் தன்னை விட்டு பிரிந்து, பல்வேறு கட்சிகளில் இணைந்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்யலாம்? தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன என்பது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றே தீர வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறார் ஓபிஎஸ். என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை. திமுக கூட்டணியும் ஓபிஎஸ்.,ஐ சேர்க்க தயக்கம் காட்டி வருகிறது.
இதனால் தற்போது ஓபிஎஸ் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் என்றால் ஒன்று தவெக.,வில் சென்று இணைவது. அல்லது சுயேட்சையாக தனித்து போட்டி. அதுவும் இல்லை என்றால் அரசியலில் இருந்து விலகுவது என்ற மூன்று வாய்ப்புகள் தான் உள்ளது. இதில் மூன்றாவது வாய்ப்பை அவர் தேர்வு செய்ய வாய்ப்பு மிக மிக குறைவு. தனித்து போட்டி என ஏற்கனவே லோக்சபா தேர்தலில் முயற்சித்து படுதோல்வியை சந்தித்தார். அதனால் அதையும் தேர்வு செய்ய மாட்டார். ஒன்று செங்கோட்டையனை போல் தவெக.,வில் சென்று இணைவது. அப்படி இல்லை என்றால் மீண்டும் ஏதாவது வழியில் முயற்சித்து என்டிஏ அல்லது திமுக கூட்டணியில் இணைய பார்ப்பார்.
அதிமுகவில் இணைக்க டிடிவி தினகரன் நடவடிக்கை எடுக்கட்டும் - ஓ.பி.எஸ்.
இந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம். ஆலோசனையின்போது உங்களது கருத்துக்களை துண்டுச் சீட்டில் எழுதித் தருமாறு ஓ.பி.எஸ். கேட்டுக் கொண்டார். ஆனால் கூட்டத்தினர் அதை ஏற்கவில்லை. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக விவாதிப்போம் என்று வலியுறுத்தியதால் கூட்டத்தில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் அமைதிப்படுத்திய பின்னர் ஆலோசனை தொடர்ந்தது.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது தான் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைப்பு தொடங்கவில்லை. அதிமுகவை ஒருங்கிணைப்பதுதான் தனது முக்கிய நோக்கம். அது இன்னும் தொடர்கிறது. எங்களது பலத்தை காட்டவே ராமநாதபுரம் தேர்தலில் போட்டியிட்டேன்.
எனது 2வது தர்மயுத்தத்திற்குக் காரணமே மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும்தான். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும் எதிரும் புதிருமாக இருந்தவர்கள். நான் அதிமுகவில் இணைய மாட்டேன் என்று எப்போது கூறினேன். இப்போது கூட நான் தயார்தான். தினகரனும், அவருடைய அருமை அண்ணன் இபிஎஸ்ஸும் அதற்கான நடவடிக்கையை எடுக்கட்டும் நான் தயார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்ல என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.