ஒரே நாளில் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது Oracle நிறுவனம்

Su.tha Arivalagan
Apr 01, 2026,01:20 PM IST

சென்னை: உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில், முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) எடுத்துள்ள அதிரடி முடிவு ஐடி ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 30,000 ஊழியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்து அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவில் எதிரொலிக்கும் பணிநீக்கம் :


இந்த மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையில் இந்தியா பலத்த அடியை சந்தித்துள்ளது. மொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சுமார் 12,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை அலுவலகம் வந்த ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்பு குறித்த செய்தியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், நிலைகுலைந்து போயுள்ளனர். குறிப்பாக பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் உள்ள ஆரக்கிள் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


காரணம் என்ன?




இந்தத் திடீர் பணிநீக்கத்திற்குப் பின்னால் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம் தனது செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தி வருவதால், மனித உழைப்பின் தேவையைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் நிறுவனத்தின் லாப வரம்பைத் தக்கவைக்க இந்தச் செலவுக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சமூக வலைதளங்களில் குவியும் வேதனை :


பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும், மனவேதனையையும் லிங்க்டு இன் (LinkedIn) மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். "பல வருட உழைப்பிற்குப் பிறகு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒரு மின்னஞ்சல் மூலம் வேலை பறிபோயுள்ளது" எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். "இன்று காலை வேலைக்குச் சென்றபோது எனது ஐடி கார்டு வேலை செய்யவில்லை. பின்னரே எனக்கு பணிநீக்க மின்னஞ்சல் வந்திருப்பது தெரிந்தது. இது மிகவும் வேதனை அளிக்கிறது," என்று பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ஐடி துறையின் எதிர்காலம் என்ன?


கடந்த சில மாதங்களாகவே பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. இருப்பினும், ஆரக்கிள் போன்ற ஒரு பெரிய நிறுவனம் ஒரே நாளில் 30,000 பேரைக் குறைப்பது, தொழில்நுட்பத் துறையில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. திறமை வாய்ந்த ஊழியர்கள் திடீரென வேலை இழந்து நிற்பது, இந்தியப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். வரும் நாட்களில் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதேபோன்ற முடிவுகளை எடுக்குமா என்ற அச்சம் ஐடி ஊழியர்களிடையே நிலவுகிறது.