நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!
Nov 24, 2025,02:10 PM IST
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நவம்பர் 29ம் தேதி கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நவம்பர் 29ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் சனிக்கிழமை (நவம்பர் 22) நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 23ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவுகிறது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நவம்பர் 23ம் தேதி உருவானது. இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பர் 29ம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வரும் நவம்பர் 29ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்:
ராணிப்பேட்டை, வேலூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.