காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

Su.tha Arivalagan
Sep 15, 2026,11:08 AM IST

- பூரணவள்ளி சேகர்


பெண் பார்க்கும் படலமும் மாப்பிள்ளை பார்க்கும் படலமும்  இனிதே முடிந்தது.


திருமணம் பேசி முடிப்பதற்காக கவிதா  குடும்பத்தினரும் கமலா குடும்பத்தினரும்  ஒரு நல்ல நாளில் கூடினர். திருமண நாள் பார்த்துப் பேசி முடிக்கும் போது  திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் தங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று இருவரும் தம் கருத்தைக் கூறினர்.


தன் கணவர் உடல்நலக் குறைவாக இருக்கிறார்.  தன் இரு பிள்ளைகளுள் மூத்த பிள்ளைக்கே தன் கணவரின் வியாபாரம் பற்றித் தெரியும். அடுத்த பிள்ளை  வெளியூரில் கல்லூரியில் படிப்பதால் மணமக்கள் இருவரும் தன் வீட்டிலிருந்து வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கவிதா திடமாகக் கூறினாள்.


கமலா தன் கணவரின் காலத்திற்குப் பின் பூ வியாபாரம் செய்து தன் ஒரே  பிள்ளையைப் படிக்க வைத்தாள். படிப்பிற்குப் பிறகு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தபின் திருமண ஏற்பாடு செய்தாள்.


கவிதாவின்  திடமான பேச்சு கமலாவின் மனதை புண்ணாக்கியது. உறவினர்களின் பேச்சிற்குக் கூட கவிதா செவி சாய்க்கவில்லை. கண்ணன் ஏதும் பேச முடியாமல் இருந்தார்.


வாராவாரம் சென்று கமலாவைச் சந்தித்து தேவை ஏதாவது இருப்பின் செய்யச் சொல்கிறேன் என்று கவிதா தீர்க்கமாகக் கூறினாள்.




இங்கு நடந்த எந்த ஒரு நிகழ்வும் அறியாமல் பெண்ணும்  மாப்பிள்ளையும் தம்  திருமணக் கனவு பற்றி அளவளாவினர். இருவரும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்  கமலா. என்ன முடிவு செய்வதென்று யோசித்தாள்.


தன் பிள்ளைகளின் மகிழ்வு தான் முதன்மையானது என்று முடிவு செய்தாள். எனவே தன் பிள்ளை அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று நினைத்தாள்.


தகவல் அறிந்து வருத்தப்பட்டத் தன் பிள்ளையைத் தேற்றினாள். திருமண நாளை முடிவு செய்து தன் ஒரே மகனைப் பெண் வீட்டிற்கு அனுப்பிவிட்டுத் தன் பூ வியாபாரத்தைத் தொடர்ந்தாள்...!


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)