ஒரு பக்க கதை .. கதையின் பெயரே இதுதான் பாஸ்!
- ராஜஸ்ரீ
எனது நண்பன் ரவி ஒரு வார இதழை நடத்தினான். நடத்தினான் என்று இறந்த காலத்தில் கூறுவதன் காரணத்தை இந்த கதையை படித்தால் புரியும். நான் ஒரு நாள் அவனை சந்திக்கச் சென்றேன்.
அவன் ஸ்ரீநிவாசா, நீதான் கதைகள் எழுதுவாயே என் வார இதழுக்கு ஒரு பக்க கதை ஒன்றை எழுதித் தாயேன் என்றான். நானும் சரி ஒரு வாரம் அவகாசம் கொடு என்றேன்.
எதற்கு ஒரு வாரம்? என்று கேட்டான்.
நன்கு சிந்தித்து எழுத வேண்டாமா? அதற்காகத்தான் என்றேன்.
அவனும் சரி, நன்கு சிந்தித்து எழுது. ஆனால் மூக்கை சிந்தாதே என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
நான் நேராக கடைக்குச் சென்று ஐந்நூறு பேப்பரை வாங்கிக் கொண்டேன்.
பிறகு வீட்டிற்கு வந்து என் மனைவியிடம் நான் ஒரு பக்க கதையை எழுதப் போகிறேன். ஒரு வாரத்திற்கு என்னை தொந்தரவு பண்ணாதே என்றேன்.
உடனே அவள் சரி, நான் எங்க அம்மா வீட்டுக்கு போய் விட்டு வருகிறேன் என்று கிளம்பி சென்று விட்டாள்.
அம்மா வீட்டிற்கு போக வாய்ப்பு எப்ப கிடைக்கும்? என்று காத்துக் கொண்டிருந்தாள் போலிருக்கிறது
நான் எழுதத் துவங்கினேன். கற்பனை குதிரையை தட்டி விட்டேன். அது ஈரேழுலோகங்களையும் சுற்றிவிட்டு வந்தது.
பிறகு ஒரு வாரத்தில் ஆயிரம் பக்கங்கள் மள மளவென்று எழுதித் தள்ளிவிட்டேன். எதை? ஒரு பக்க கதையை.
மறுநாள் எழுத்தாளர்களுக்கே உரிய ஜோல்னா பையில் அந்த கதையை எடுத்துக் கொண்டு வார இதழ் அலுவலகத்திற்குச் சென்று ரவியை சந்தித்தேன்.
என்னைப் பார்த்ததுமே அவன் வா உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கே நான் கேட்ட ஒரு பக்க கதை? என்று கேட்டான்.
உடனே நான் ஜோல்னா பையிலிருந்து அந்த ஆயிரம் பக்க கதையை எடுத்து அவனிடம் நீட்டினேன்.
அதைப் பார்த்த அவன் சிரித்தவாறு ஸ்ரீநிவாசா, நான் நாவலை கேட்கவில்லை. ஒரு பக்க கதையை கேட்டேன் என்றான்.
நான் அதுதான் இது என்று கரகாட்டக்காரன் திரைப்படத்தில் செந்தில் வாழைப்பழ கதையைப்போல் கூறினேன்.
அவன் சற்று முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு ஸ்ரீநிவாசா, எனக்கு இந்த விதி, சகுனம் இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லை. ஆனால் இப்பொழுது அற்றை நம்புகிறேன் என்றான்.
நான் எப்படி நம்புகிறாய் என்று கேட்டேன்.
போயும் போயும் உன்கிட்ட ஒரு பக்க கதையை கேட்டேன் பாரு. அது என்னோட விதிதானே. ஒரு பக்க கதையை எழுதித் தான்னு சொன்னால் ஆயிரம் பக்க கதையை எழுதிக் கொண்டு வந்திருக்கியே என்றான்.
நான் கவலைப்படாதே. நீ என்ன பண்றே. இந்த ஆயிரம் பக்க கதையை நிதானமாக படி. பிறகு அதை ஒரு பக்க கதையா சுருக்கி எழுதி விடு. அவ்வளவுதான். பிரச்சினை தீர்ந்தது என்றேன்.
அதற்கு அவன் அதைவிட எளிய வழி நான் என் வார இதழ் அலுவலகத்தை இழுத்து மூடிவிட வேண்டியதுதான் என்று கூறி உடனே வார இதழை அலுவலகத்தை மூடி விட்டான். வாசகர்கள் பிழைத்தனர்.
இப்பொழுது புரிகிறதா நான் ஏன் வார இதழை நடத்தினேன் என்று இறந்த காலத்தில் கூறியதற்குக் காரணம்.
உண்மயான காரணம் இதுவல்ல. பத்திரிகை நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது. மூடுவதற்கு காரணம் சொல்ல வேண்டுமே. அதனால் என்னால்தான் மூடும்படி ஆகி விட்டது என்று எல்லோரிடமும் சொல்லுவான்.
(எழுத்தாளர் ராஜஸ்ரீ-யின் இயற்பெயர் வி.பி.ஸ்ரீநிவாசன். சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். இவரது தந்தையின் பெயரான ராஜகோபாலனில் முதல் இரண்டு எழுத்துக்களையும் தனது பெயரில் முதல் எழுத்தையும் சேர்த்து ராஜஸ்ரீ என புனை பெயராக வைத்துக் கொண்டார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)