நானாக என்னிடம் எதுவுமில்லை இப்போது!
- கொடைக்கானல் ப.வினு
உனக்கு நான் என்னவாக வேண்டுமோ
அப்படியே எடுத்துக்கொள் என்னை.
உன் களைப்பான மாலைகளில்
ஆறுதல் தரும் ஒரு மெல்லிய காற்றாகவோ,
நீ தனியே பேச நினைக்கும் இரவுகளில்
மௌனமாய் உற்றுக்கேட்கும்
ஒரு நிழலாகவோ என்னை மாற்றிக்கொள்.
மழை பெய்யும் ஒரு அதிகாலையில்
ஜன்னலைத் தட்டும் முதல் துளியாய்,
அல்லது நீ வாசிக்கத் தொடங்கும்
புத்தகத்தின் பக்கங்களுக்குள்
மறைந்திருக்கும் ஒற்றை மயிலிறகாய்...
உன் விருப்பம்போல் எனக்குப் பெயர் சூட்டு.
எந்த வரையறைகளும் எனக்கு வேண்டாம்;
உன் பாதங்கள் நடக்கும் பாதையில்
உன் கால்களை உறுத்தாத
ஒரு மென்பூவாய் விழுந்துகிடக்கவே ஆசை.
நீ சிரிக்க விரும்பினால்
உன் இதழோரம் ஒட்டிக்கொள்ளும்
ஒரு சின்னப் புன்னகையாய்,
நீ அமைதியைத் தேடினால்
உன் மனதை வருடும்
ஒரு தியானமாய் என்னை ஆக்கிக்கொள்.
நானாக என்னிடம் எதுவுமில்லை இப்போது.
நீ எதை விரும்புகிறாயோ,
உன் உலகத்திற்கு எது தேவையோ,
அப்படியே உருமாறிக்கொள்கிறேன் நான்.
எடுத்துக்கொள்,
உன் கைகளில் தவழும் வரை
எனக்கென்று எந்த வடிவமும் இல்லை.
(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)