ஆண் பூ

Su.tha Arivalagan
Jul 18, 2026,02:45 PM IST

- கொடைக்கானல் ப.வினு


​பூவுக்குள் ஒரு காதல் தூதன்  

நீ

புல்லாங்குழல் ஊதாத ஒரு மாயக்கண்ணன்!


​வண்ண இதழ்கள் உனக்கும் உண்டு

ஆனால் சுமப்பதற்குத் தான் கர்ப்பப்பை இல்லை!


தன் காதலியின் கூந்தலில் அமர முடியாத

துரதிர்ஷ்டவசமான தேவதூதன் நீ!


​பெண் பூவுக்கு

தாய்மை என்னும் மகுடம் தந்துவிட்டு

மகரந்தத்தை மட்டும் தூதனுப்பி

மண்ணில் உதிரும் வள்ளலடா நீ!




​காய்க்கத் தெரியாத பூ என்று

உன்னை உலகம் கேலி செய்யலாம்...

ஆனால்,

உன் ஒற்றை முத்தத்தின் எச்சத்தில்தானே

உயிர்க்கிறது அடுத்த தலைமுறை!


​நீ

காயாக மாறாமல் காய்ந்து போகலாம்,

கனியாக மாறாமல் கரைந்து போகலாம்!

ஆனால்,

படைப்பின் முதல் கவிதை நீதான்!


​தன்னை அழித்து

காதலியை வாழவைக்கும்

சுயநலமில்லாத ஆண் பூவே...


நீயும்

இயற்கை எழுதிச் சுருட்டி வீசிய

ஒரு காதல் கடிதம் தான்!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)