ஒரேயொரு முறை
- ப.வினு
ஒரேயொரு முறை
என் கண்களால் நீ உன்னைப் பார்
உன் கூந்தல் கலைந்திருப்பதாய்
நீ கண்ணாடியிடம் குறைபட்டுக் கொள்ள மாட்டாய்
அந்தக் கலைந்த முடிகளுக்குள் தான்
என் மொத்தத் தூக்கமும்
தொலைந்து கிடக்கிறது என்பது உனக்குப் புரியும்.
உன் சிரிப்பில் இருக்கும்
அந்தச் சின்னத் தயக்கத்தை
நீ ஒளித்து வைக்க மாட்டாய்
ஏனென்றால் என் வறண்ட நாட்களின்
ஒரே மழைத்துளி அதுதான்
என்பதை நீ உணர்வாய்.
நீ பேசும் சாதாரண வார்த்தைகளை
சாதாரணமாய்க் கடந்து போக மாட்டாய்
ஒவ்வொரு எழுத்திலும் ஒளிந்திருக்கும்
என் உயிரின் அதிர்வை
நீயும் கேட்டு ரசிப்பாய்.
எல்லாவற்றிற்கும் மேலாக...
உன்னை நீயே
இவ்வளவு அலட்சியமாய்க் கடந்து போக மாட்டாய்
ஒரு சாதாரணப் பெண்ணாய் நீ பார்க்கும் உன்னை
என் கண்கள் எவ்வளவு பெரிய
அதிசயமாய் ஆராதிக்கிறது என்பதைப் பார்த்து
நீயே வெட்கப்பட்டுப் போவாய்!
(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)