உன் கண்ணில் நீர் வழிந்தால்!
- பாவலர் மாயோன்மங்கை
உன்னையே எனக்காகத்
தந்தவளே வந்தவளே
என்னவளே
பொன்னை விரும்பும்
பூமியில்
என்னிடம் நீ கண்டதென்ன
இரவில் ஓர் நாள் பேருந்துப்பயணம்
நீயும்
நானும் மட்டுமே
எனக்கான இடத்தில் நான் இறங்கவில்லை உன்னுடனே
நேரம் கடந்த வேளையில்
உனக்கான நிறுத்தம் வர
நானும் உன்னுடனே இறங்க
கும்மிருட்டு வேளை
தனியாகப் பயணம் செய்ய விடாது
வீட்டின்
எல்லை வரை நான்
இரவிலும்கூட உன் விழி
உகுத்த நீர் வழிந்தோட
நீ கண்ணீரைத் துடைத்ததைப் பார்த்தேன்
சந்திப்பு அதோடு அறுந்துபோய்
நீ யாரோ
நான் யாரோ
அத்திபூத்தாற்போலே
அலுவலகத்தே கண்டேன் மெளனமே
உறவுகளற்ற உயிராக
வாழ்வாதாரம் வேலை
செய்யவேண்டிய சூழல்
கைம்பெண் என்றார்கள்
நான் ஐம்பொன் என்றேன்
உன்னை
விட்டுத்தர மனமில்லை
இதெல்லாம் எப்படிச் சொல்ல
துரிதமாகச் செயல்பட்டேன்
மனதைக்கூறினேன்
மனதை வென்றேன்
மறு திங்கள் மணமக்களாக
சமவேலை சமமான சம்பளம்
நீ நினைத்தால்
அதிகச் சம்பளத்தானை
அடைந்திருக்கலாம்
இல்லையே
ஏனென்றால் உனைத் தனியாக விடாது பேருந்தில் உதவியது
நன்றிக் கடண் நங்கை செலுத்த
பெண்களைத் தவறாக
நினையாதே
முடிந்தால் உதவிடு
இல்லையேல் விலகிடு