Tamil Poem: செல்லக்குட்டி வெல்லக்கட்டி!

Su.tha Arivalagan
Jun 08, 2026,11:34 AM IST

- பாவலர் மாயோன்மங்கை


நெல்லுக்குத்திப் பாறையிலே

சொல்லக்குத்திப் போனவளே


முள்ளுப்போல தைக்குதடி   

முனுமுனுத்த.  உன்

வார்த்தெ


முள்ளுக் காயத்துக்கு

முள்முருங்க மருந்து உண்டு


சொல்லாலக் குத்தியது

வலிக்குதடி வலிக்குதடி


மருந்து இல்லாம மனசு

ரொம்பத் துடிக்குதடி




வருந்தி நான் கிடக்க

விருந்துக்கு  போனதென்ன?


செம்பருத்திப் பூ இதழில்

சிந்துகின்ற  தேனெடுத்து


சிருங்காரப் பார்வையிலே  

சிரித்தே தடவிடடி


முள்ளுச்சொல்லு

கள்ளாகும்

முகமெல்லாம் களை ஆகும்


கல்ல விட்டு எறிந்தாலும்

முல்லைப்  பூவாக மாறும்


செல்லக்குட்டி  நீ  எனக்கு

வெல்லக்கட்டியா இனிப்பே


தெள்ளுத்தமிழ் பாட்டப்போலே

நெஞ்சிலே  நீ நிறைவே