நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ம் தேதி பயங்கரவாத கும்பல் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். 10த்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை இருந்தாலும், சுற்றுலா பயணிகளை தாக்கி இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த கொடூர சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு தடைநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் வாகன சோதனை சாவடி மூடல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா.
இந்த பயங்கரவாத செயலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டிஆர்எப் என்ற இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது.
இந்த டிஆர்எப் அமைப்பிற்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாகவே இந்தியா உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களையும் உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது. எல்லைக்குள் இரு நாட்டினர்களின் படைகளையும் தயார் நிலையில் வைத்தது. பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால், இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பஹல்காம் விவகாரத்தில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், நம்பகமான விசாரணையில் பங்கேற்ற பாகிஸ்தான் தயாராக உள்ளது. சமீபத்தில் பஹல்காமில் நடைபெற்ற துயரம் பழி கூறும் போக்குக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொறுப்பு மிக்க நாடாக, நடுநிலையான, வெளிப்படையான நம்பகமான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.