ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் பயங்கரத் தாக்குதல்.. 400 பேருக்கும் மேல் உயிரிழப்பு
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த கோரமான தாக்குதலில் பலி எண்ணிக்கை தற்போது 400-ஆக உயர்ந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார். மேலும், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கில் ஈரானுடன் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் போர் புரிந்து வரும் நிலையில் மறுபக்கம் தெற்காசியாவில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு மோதல் நடந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவமும், தலிபான் படையினரும் மோதி வருவதில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் போதைப் பொருள் மறுவாழ்வு சிகிச்சை மையம் மீது பாகிஸ்தான் விமானப்படைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
காபூலில் உள்ள 2,000 படுக்கைகள் கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு மருத்துவமனை. இத்தாக்குதலில் மருத்துவமனையின் பெரும் பகுதி தரைமட்டமானது. பலியானவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஆனால் இக்குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தாங்கள் காபூலில் உள்ள ராணுவ இலக்குகளையும், பயங்கரவாத உள்கட்டமைப்புகளையும் மட்டுமே துல்லியமாகத் தாக்கியதாகவும், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களைத் தாக்கவில்லை என்றும் பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடும் போர் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வான்வழித் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என்று வர்ணித்துள்ள ஆப்கானிஸ்தான் அரசு, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.