பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா.. படையெடுக்கும் பக்தர்கள்
- ஸ்வர்ணலட்சுமி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடாகும். 20 26 ஆம் ஆண்டிற்கான பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 26, 2026 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் அதாவது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும். காவடி எடுத்து வந்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
பழனி முருகப் பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது எனவே கோடை காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த காவடி எடுத்து பக்தர்கள் பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள்.
பழனி முருகன் கோவிலின் உப கோவிலான திருவாவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் இரவு கிராம சாந்தி,வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் திருவாவினன்குடி கோவில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சிறப்பாக நடைபெற்றது.
மேலும் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானைக்கு பால், பழம், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பான அலங்காரம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடி படம், கோவில் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இச்சமயம் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
சேவல் மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 9:45 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. குழுமியிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என சரண கோஷம் எழுப்பினர்.
தீர்த்தக்காவடி, அழகு குத்துதல் மற்றும் தேரோட்டம். திருவிழாவினை ஒட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி வீதியுலா நடைபெறும்.
பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமார சுவாமி,வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
ஏப்ரல் 1 புதன்கிழமை பங்குனி உத்திர நாளில் பழனி கிரி வீதியில் தேரோட்டம் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 4 சனிக்கிழமை கொடி இறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் சமயம் தங்கத்தேர் ஊர்வலம் நிறுத்துவது வழக்கம்.இதனைத் தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது. மேலும் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. வீரவேல் முருகனுக்கு அரோகரா!
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.