பழனி மலை முருகா.. திருவாவினன்குடி திருக்கோவில் சிறப்புகள்!
- ஸ்வர்ணலட்சுமி
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது குழந்தை வேலாயுத சுவாமிக்கு அருள்மிகு திரு ஆவின்குடி திருக்கோவில். பலரும் தண்டாயுத சுவாமி திருக்கோவில் பழனி மலை மீது உள்ள கோவிலை மூன்றாவது அறுபடை வீடாக எண்ணுகின்றனர்.ஆனால் பழனி தண்டாயுத சுவாமி திருக்கோவிலும், திருவாவினன்குடி திருக்கோவிலும் இந்த இரண்டுமே மூன்றாவது அறுபடை வீடாக கருதப்படுகின்றது.
பழனி என்பது மழையின் பெயராகும். பழனி மலையையும், மலை அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே 'பழனி 'என்று அழைக்கப்படுகின்றது.
பெயர் காரணம் :
திரு ஆவினன்குடி -
திரு - லட்சுமி தேவி.
ஆ -காமதேனு.
இனன் -சூரியன்.
கு - பூமாதேவி.
டி -அக்னிதேவன்.
இந்த திருத்தலத்தை திரு என்கிற லட்சுமி தேவியும், ஆ என்கிற காமதேனுவும், இனம் என்கிற சூரியனும், கு எனும் பூமாதேவியும், டி எனும் அக்னி தேவனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால்
"திரு ஆவினன் குடி" என்று பெயர் பெற்றது .
தல வரலாறு :
நாரதர் கொடுத்த கனியை தனக்கு தராததால் கோபித்துக் கொண்ட முருகன் மயில் மீது ஏறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய அம்பிகை பின்தொடர்ந்து வந்தார். சிவனும் பின்தொடர்ந்து வந்தார். முருகன் இந்த ஸ்தலத்தில் நின்றார்.அம்பிகை இங்கு மகனை சமாதானம் செய்கிறார். ஆனாலும், முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி தங்கி விட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.
சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால் "குழந்தை வேலாயுதர்" என்று பெயர் பெற்றது. பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்த போது அவரைக் கண்ட அவ்வையார் "பழம் நீ"- நீயே ஞான வடிவானவன் என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார் . இந்தப் பெயரே பிற்காலத்தில் "பழநி" என்று மருவியது.
முருகப்பெருமானை பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், பார்வதி தேவியும் முருகனை பின்தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து "பழம் நீ" என்று முருகனுக்கு சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி "பழநி" என்று ஆகிவிட்டது என்றும் பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.
திருவாவினன்குடி கோவிலுக்கு அருகில் முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும்,கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி,அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ் வரலாற்றை விளக்குகின்றன.
சங்க காலத்தில் நக்கீரரரும்,பிற்காலத்தில் அருணகிரிநாதராலும் பாடப்பட்ட பழமையான திருத்தலம் இது.
சனி பரிகார ஸ்தலம் :
இத்திருத்தலத்தில் வழிபடுவதனால் சனியால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.சனி பகவானுக்கு என்று தனியாக சன்னதி இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்தத் திருத்தலத்தில் முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி தெய்வானை இல்லை. பழனிக்கு செல்பவர்கள் முதலில் திரு ஆவினன்குடியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு,பின்பு பெரியநாயகியையும் அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன் குடி குழந்தை வேலாயுதர சுவாமி திருக்கோவிலையும் வந்து வணங்க வேண்டும்.அதன் பின்பே மலைக்கோவிலில் அமர்ந்துள்ள தண்டாயுதபாணி சுவாமியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.