பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!

Meenakshi
Jan 21, 2026,12:49 PM IST

திண்டுக்கல்: தைப்பூச திருவிழா ஜனவரி 26ம் தேதி பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 


அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆண்டின் முக்கியத் திருவிழாவான தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விழாவின் முக்கிய நிகழ்வாக  ஜனவரி 26ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் அதிகாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ஜனவரி 31ம் தேதி  திருக்கல்யாணமும், அன்று இரவே வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று மாலை 4:30 மணி அளவில் பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 4ம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.




தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வரத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து பழனிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் வருகிற 31ம் தேதி, பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு அனைத்து வழிகளும் இலவசமாக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.