பங்குனி மாத சிவராத்திரி வெகு விசேஷமானது.. எப்படி தெரியுமா?
- ஸ்வர்ணலட்சுமி
விசுவா வசு வருடம் 20 26 மார்ச் 17ஆம் தேதி, பங்குனி மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமையான இன்று மாத சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
சிவராத்திரி தினத்தன்று தான் பார்வதி தேவி, முருகப்பெருமான், குபேரன்,இந்திரன் இவர்கள் விரதம் இருந்து எண்ணற்ற சக்திகளை பெற்றனர் என்பது ஐதீகம். இன்று சிவபெருமானையும், நந்தியையும் வணங்கிட எண்ணற்ற பலன்கள் கிடைக்க பெறுவோம்.
சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவோருக்கு சிவன் அருள் மட்டும் இன்றி ஒரு அரசனுக்கு இணையான ராஜபோக வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தொடர்ச்சியாக 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவகதி அடைவார்கள் என்றும்,அவர்களின் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இன்று அமைந்துள்ள பங்குனி மாத சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவபெருமான் வழிபாடு செய்வதால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.
புராணக்கதை :
சிவராத்திரி பற்றிய புராண கதையை அறிந்து கொள்வோம் .முன்னொரு சமயம் பிரளய காலத்தின் போது பிரம்மன் உள்பட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டது. அதனால் மன வருத்தம் அடைந்த அன்னை பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து இரவு முழுவதும் பூஜை செய்கிறாள்.ஆகம விதிப்படி இரவு 4 ஜாமம் முழுவதும் பூஜை முடிந்ததும் சிவபெருமானை வணங்கிய அன்னை தான் வழிபட்ட இரவை தேவர்களும்,மனிதர்களும் சிவராத்திரி என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்.
சிவராத்திரி தினத்தன்று மாலையில் சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயம் ஆகும் வரை சிவ பெருமானை வணங்கியவர்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும் வழங்கி இறுதியில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறாள். சிவபெருமானும் அவ்வாறே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார்.
வழிபாடு:
சிவராத்திரி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி பின்னர் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று, நந்தி தேவரையும் சிவபெருமானையும் வணங்கி, அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது மிகச்சிறப்பு. இந்த நன்னாளில் நாள் முழுவதும் உபவாசம் இருக்க இயலாதவர்கள், அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப,நிறைய தண்ணீர் அருந்தி,பால் பழங்கள், இளநீர் அல்லது எளிய உணவுகளை உட்கொண்டு வழிபாடுகள் செய்யலாம்.
எளிய சிவமந்திரங்கள்:
இன்று நாள் முழுவதும் சிவபுராணம்,சிவ கீதை, பெரிய புராணம்,தேவார திருவாசக பாடல்கள் படிப்பது சிறப்பு. ஓம் நமச்சிவாய என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது சிறப்பு. விரதம் மேற் கொள்பவர்கள் இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை பூஜை முடிந்த பிறகு உட்கொண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
இன்று பூஜை செய்யும் பொழுது 1.சிவ 2. ருத்ர 3.பசுபதி 4.நீலகண்டா 5.மகேஸ்வரா 6.ஹரிகே சா 7. விருப்பாக்க்ஷா 8.சம்பு, 9.சூலினா 10.உக்ரா 11.பீமா 12. மகாதேவா ஆகிய 12 பெயர்களை கூறி இறைவனை வில்வம் மற்றும் வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடுகள் செய்யும் மகத்துவத்தை யாராலும் அளவிட முடியாது.
இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு, அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் இவ்வாறு சிவ வழிபாடு செய்வது சிறப்பு. மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.