ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்.. ஆபரேஷன் சிந்தூர் டீமின் முக்கிய மூளையாக விளங்கியவர்!

Su.tha Arivalagan
Jun 28, 2025,05:29 PM IST

டெல்லி: உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கையின் போது முக்கிய உளவுத்துறை நடவடிக்கைகளுக்குப் பராக் ஜெயின் தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு "ஆப்ரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டது. இத்தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதிகளே காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால், பாகிஸ்தான் இதனை மறுத்ததுடன், ஒரு சுதந்திரமான விசாரணையையும் கோரியது. நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு மே 10 அன்று போர் நிறுத்தம் எட்டப்பட்டது.


இந்த நடவடிக்கைக்கு முக்கியப் பங்காற்றியவர்தான் பராக் ஜெயின். தற்போது 'ரா' அமைப்பின் இரண்டாவது மூத்த அதிகாரியாகப் பராக் ஜெயின் உள்ளார். தற்போதைய 'ரா' தலைவர் ரவி சின்ஹா ஜூன் 30 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரிடமிருந்து பராக் ஜெயின் பொறுப்பேற்பார். இவர் இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.




பராக் ஜெயின் தற்போது 'ரா'வின் விமான ஆராய்ச்சி மையத்தின் (ARC) தலைவராக உள்ளார். இந்த மையம் வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.


1989-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த இந்திய காவல் பணி (IPS) அதிகாரியான பராக் ஜெயின், 'ரா' அமைப்பில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். பஞ்சாபில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், இவர் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் (SSP) மற்றும் காவல் துணைத் தலைவராகவும் (DIG) பணியாற்றியுள்ளார்.


'ரா' அமைப்பில், இவர் பாகிஸ்தான் தொடர்பான விவகாரங்களை விரிவாகக் கையாண்டுள்ளார். ஆர்ட்டிகிள் 370 நீக்கப்பட்ட காலத்தில் ஜம்மு காஷ்மீரிலும் இவர் பணியாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் பராக் பணியாற்றியுள்ளார். கனடாவில் இவர் பணியாற்றிய காலத்தில் அங்கிருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களைக் கண்காணித்ததாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.