மலேசியா என்றதும் இனி பிரகாஷ் ராஜ் ஞாபகமும் வரும்.. பார்த்திபன் போட்ட பலே டிவீட்!
சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜின் கலைக்கூடம் குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சிலாகித்து டிவீட் போட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜ் நடிகராக மட்டுமல்லாமல் நல்ல கலா ரசனை கொண்டவரும் கூட. நல்ல சிந்தனையாளரும் கூட, பேச்சாற்றல் மிக்கவரும் கூட. புதுமைப்பித்தனும் கூட. அதேபோலத்தான் நம்ம பார்த்திபனும். நடிகராக மட்டும் அவரை சுருக்கிப் பார்க்க முடியாது. சீரிய சிந்தனையாளர், நல்ல பேச்சாளர், புத்திசாலி, அறிவுஜீவி. இவர்கள் இருவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும். அந்த இடமே "கலாபாசமாகத்தானே" இருக்கும். அப்படி ஒரு சந்திப்பு நடந்துள்ளது. அதுகுறித்து பார்த்திபன் போட்டுள்ள ஒரு டிவீட்.
மைசூரில் மட்டுமல்ல இனி மலேஷியாவில் கூட கலைஞர்கள் பார்க்க வேண்டிய முக்கிய ஸ்தலம் நடிகர் பிரகாஷ் (மஹா) ராஜா அவர்களின் ‘ NIRDIGANTHA ‘ கலைக்கூடம். அடடடடடா! எத்தனை ரம்யமான மனதைக் கவரும் இடம்.
சிறப்பு யாதெனின் ….
நாடகக் கலையை மீட்டெடுக்க, நாடகக் கலைஞர்களை உருவாக்கும் ஒரு பட்டறை அது. இப்படி ஒரு பட்டறை இன்றி உருப்பட்டாரை காண்பதரிது.பட்டரை (butter-ஐ) தடவி மேலே ஜாமை பூசி பன்னுக்குள் வைத்து பிலால் செய்யும் பிஸினஸ் பல பில்லியனைத் தாண்டும். வியாபாரத்தில் (bun butter-கள்) பண்பட்டவர்கள் லாபத்தை எப்படி பெருக்குவது என்று தான் யோசிப்பார்கள். ஆனால் நட்பர் பிரகாஷ்ராஜ் தான் சினிமாவில் சம்பாதித்ததில் பாதிக்கும் மேற்பட்டதை பாதிக்கப்பட்டிருக்கும் நாடகக் கலையை உயிரூட்ட இப்படியொரு பட்டறையை அதுவும் மிக நேர்த்தியோடு !
பயிற்சி காலத்தில் உணவு இருப்பிடம் சகலமும் இலவசம் கூடுதலாய் அவர்களுக்கு ஊக்கத்தொகையும்.
ஆகச்சிறந்த நடிகர்கள் கூட,சினிமாப்பசுவில் கறந்த வரை லாபமென கல்லா நிரப்பி கல்லரைக்குத் தான் போய் இருக்கிறார்கள். தன்னை வளர்த்த கலைக்கு நன்றி செய்ய நினைத்ததில்லை சிலரைத் தவிர!
நானும் சினிமாவில் சம்பாதித்ததை சினிவாவோடு மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். அதில் அகமகிழ்ந்து
மிக நெகிழ்ச்சியுடனே வாழ்ந்தும் வருகிறேன்.அதை சொல்லில் சொல்லல் கடினம்.அங்கு காவிரி ஓட, அதில் கலைமகள் தலை நீராடும் ‘நிர்டிகந்தா’-வில் சொக்கிப் போய் குந்தியிருக்கிறேன்.
பிரகாஷ் ராஜாதி ராஜாவுக்கு சல்யூட் சமர்ப்பணம் என்று சிலாகித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.