ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
சென்னை: சென்னை ரயில்வே கோட்டம், ரயில்வே உணவகங்களில் பயணிகள் புகார் தெரிவிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல், உணவகங்களில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து, உணவு தரம், விலை, சேவை போன்ற பிரச்சனைகள் குறித்து எளிதாக புகார் அளிக்கலாம். இது இந்திய ரயில்வேயின் "Rail Madad" என்ற புகார் மேலாண்மை தளத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த புதிய QR கோடு வசதி மூலம், பயணிகள் உணவகங்களில் அதிக விலை கேட்பது, உணவு தரம் குறைவாக இருப்பது, உணவு அல்லது தண்ணீர் கிடைக்காமல் போவது, சுகாதாரமற்ற சூழல் போன்ற பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களையும் புகார்களையும் தெரிவிக்கலாம். உணவகங்களில் உள்ள QR கோடை தங்கள் மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், அந்த உணவகத்தின் இடம் மற்றும் ரயில் நிலைய குறியீடு போன்ற விவரங்கள் தெரியும்.
ஸ்கேன் செய்தவுடன், பயணிகள் தானாகவே "Rail Madad" செயலிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து, SMS மூலம் வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டு புகாரைப் பதிவு செய்யலாம். புகாரின் வகையைத் தேர்ந்தெடுத்து, சுருக்கமாக விவரித்து சமர்ப்பிக்கலாம்.
புகார் சமர்ப்பிக்கப்பட்டதும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஒப்புதல் செய்தி மற்றும் தனிப்பட்ட குறிப்பு எண் அனுப்பப்படும். இதன் மூலம் பயணிகள் தங்கள் புகாரின் நிலையை கண்காணிக்க முடியும். பின்னர், புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வசதி, சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ரயில்வே உணவகங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் அனுபவம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.