பசுமரத்தாணி!

Su.tha Arivalagan
Jan 06, 2026,10:30 AM IST

- க.முருகேஸ்வரி


எங்கெங்கோ போகலாம்

ஏதேதோ ஆகலாம்

கடல் தாண்டி ஜெயிக்கலாம்

காலத்தையும் வெல்லலாம்

உயர் பதவி வகிக்கலாம்

ஏன் உலகையே நீ ஆளலாம்

என்னவெல்லாம் ஆனாலும்

உன் எண்ண ஓட்டத்தில்




பசுமரத்தாணி போல்

பத்திரமாய் பொதிந்திருக்கும்

பொக்கிஷம்

என்னவென்று எண்ணிப்பார் ......

சிலுக்குச் சட்ட போட்டுக்கிட்டு 

சிலேட்டுப் பலகை தூக்கிக் கிட்டு

சிணுங்கி சிணுங்கி 

அழுதுகிட்டு

ஒண்ணாப்பு சேர்ந்துபுட்டு

அஞ்சு வர அங்கணயே         

அழகாகதான் படிச்சுபுட்டு

அஞ்சு மைல் தாண்டி

அப்பாவுடன் சைக்கிள்ல

ஆறாப்பு போய்க்கிட்டு

நவ்வாப் பழம் 

நெல்லிக்காய் 

நட்புகளோடு பகிர்ந்துகிட்டு

இன்னும் பல பள்ளிக்கூட நினைவுகளும் 

ஒன்னு ரெண்டு சொல்லித் தந்த 

ஒண்ணாப்பு டீச்சரின் அழகும்

எண்ணும் எழுத்தும் கற்றுத்தந்த

எங்க ஊரு வாத்தியாரின் நினைவும்

நம் எண்ணம் முழுவதும் 

வண்ணங்களால் நிறைந்திருக்கும் 

பசுமரத்தாணி போல்

பசுமையாய்

நிலைத்திருக்கும்!!!!!!


(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)