குடும்பம் என்பது ஒரு புத்தகம்.. சிறு பிழைகள் வரலாம்.. திருத்திக் கொண்டு படிக்க வேண்டும்!
- பசுங்கிளி
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். குடும்பம் என்பது பல நபர்கள் சேர்ந்து இயங்கும் ஒரு சிறிய சமூகம் மாதிரி.
எல்லோருக்கும் வேறு வேறு எண்ணங்கள், பழக்கங்கள், சுபாவங்கள் இருக்கலாம். இதனால் சில சமயம் கருத்து வேறுபாடு, சின்ன சின்ன மனஸ்தாபம் வருவது இயல்புதான். ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு
பேசித் தெளிந்து கொண்டு, மன்னித்து விட்டுக்கொடுத்து சென்றால் ஒற்றுமை வலுப்படும்.
குடும்பம் என்பது ஒரு நல்ல புத்தகம் போன்றது. புத்தகத்தில் சில பக்கங்களில் சின்ன சின்னதாக சிறு எழுத்து பிழைகள் வரலாம் அதற்காக. புத்தகத்தை எரித்து விட முடியுமா.. தவறுகளை திருத்திக்கொண்டு புத்தகத்தை
பாதுகாப்போம் இல்லையா. அதுபோலத்தான் குடும்பம் என்ற புத்தகமும். குடும்ப ஒற்றுமை நீடித்தால்தான்
குழந்தைகள் பாதுகாப்பாகவும், பெரியவர்கள் மதிப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும்.
ஒருவரை ஒருவர் ஆதரிக்கும் போது அந்த குடும்பம் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளிக்க
முடியும். குடும்ப ஒற்றுமை என்பது ஒரே நாளில் உருவாவது அல்ல, அது தினமும் செய்யும் சிறிய நல்ல செயல்களால் வளர்க்கப்படுவது. பரபரப்பான வாழ்க்கை, வேலைப்பளு, பணப் பற்றாக்குறை, நேரமின்மை போன்ற சவால்கள்
மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அப்போது ஒருவருக்கொருவர் சரியாக பேசாமல் போனால் சின்னப் பிரச்சனையும் பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அதனால் வேறுபாடுகளை மறந்து விட்டுக்கொடுத்து வாழ்வோம்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பங்களை
பார்த்தல் அரிது, அதிலும் சின்ன சின்ன பிரச்சனைகளால் ஒற்றுமையை இழக்கிறோம். ஒவ்வொருவரும் தன் சுயநலத்தை கொஞ்சம் விட்டு நாம் என்ற உணர்வோடு நடந்தால் குடும்பம் வலுவாகி நிற்கும். ஏதாவது கருத்து வேறுபாடு வந்தால், கோபத்தில் தீர்வு தேடாமல் அமைதியாக தீர்வு தேடினால் மனம் விட்டு பேசினால் தீர்வு கிடைக்கும்.
அன்பு, மரியாதை, நம்பிக்கை, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல் இவை இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமையாக
வாழலாம். நம்மைப் பார்த்து நம் பிள்ளைகளும் கற்றுக்கொள்வார்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ,தனி மரம் தோப்பாகாது ஒற்றுமையாக வாழ்வோம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.