மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.. அழகான உறவின் அடையளம்.. அண்ணன் தங்கை!
- பசுங்கிளி இளங்கோவன்
உறவுகளில் மிக உன்னதமான உறவு அண்ணன்-தங்கை உறவு. அண்ணன்-தங்கையாகப் பிறப்பது உலகில் அழகாக அமைந்த ஒன்று. ஒரு தங்கைக்கு அவள் அண்ணன் பின்நிற்பவன் அல்ல (துணையாக நிற்பவன்). அண்ணன்-தங்கை உறவு என்பது மிகவும் புரிந்துணர்வோடு வாழக்கூடிய ஒன்று.
அவளின் சின்ன வயதில், பொம்மை, சாக்கலேட்டுக்காகச் சின்னச் சின்ன விஷயங்களுக்குச் சண்டை போட்டாலும், அந்தச் சண்டையில் அண்ணன் தன் தங்கைக்காக விட்டுக்கொடுப்பான். அவள் கோபப்பட்டால், தன் தங்கையைச் சிரிக்க வைத்துத் தானும் சிரிப்பான். தங்கையின் கை பிடித்து நடந்து போகும்போது, சில வயது மூத்தவன் என்றாலும் தன் தங்கையைக் காக்கும் சின்னச் சின்னச் செயல்களைச் செய்வான்; தங்கையும் தன் அண்ணனிடம் மிகுந்த அன்பு காட்டுவாள்.
அண்ணன் செய்த சின்னச் சின்ன தவறுகளுக்காக அம்மா-அப்பாவிடம் அண்ணனுக்காக வாதாடுவாள். வளரும் நாட்களில் ஓடியும் குதித்தும் விளையாடி, ஒருவர் நினைவை ஒருவர் ஏந்தி பாசத்தைச் செலுத்தி வளர்வார்கள். வளர்ந்த பிறகு வாழ்க்கை, வேலை, குடும்பம் என்று பிரிந்து சென்றாலும், அந்தப் பாசத்தின் வேர் மனசில் ஆழமாக நிலைத்திருக்கும்.
வெற்றியிலும் தோல்வியிலும் ஒருவருக்கொருவர் துணையாக நின்று, மகிழ்ச்சியில் சிரித்து, துக்கத்தில் தோள் கொடுத்து, தவறு செய்தால் கண்டித்து, கஷ்டம் வந்தால் காப்பாற்றும் அந்தப் பந்தம் வயதில் தொடங்கி வாழ்க்கையின் கடைசி வரை தொடரும். இது ஒரு உன்னதமான பாசப் பிணைப்பு. அண்ணன் இருக்கும் இடத்தில் தங்கைக்கு ஒரு பாதுகாப்பு; தங்கை இருக்கும் இடத்தில் அண்ணனுக்கு ஒரு தனிப் பாசம்.
பருவ வயதில் அண்ணன் தங்கைக்காகச் சில எல்லைகளை வகுப்பான். ஆனால், அந்த கண்டிப்புக்குள் ஆழ்ந்த அன்பும் அக்கறையும் மறைந்திருக்கும். தங்கைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவது அண்ணன்தான். பிரச்சினை வரும்போது அண்ணனிடமும், கவலையாக இருக்கும்போது அலுப்பு இன்றி அண்ணனைப் புரிந்து கொள்ளும் ஒரே உறவு தங்கைதான்.
வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் வேறு பாதைகளில் சென்றாலும், உணர்வில் உள்ள அந்தப் பாசம் எட்டிப் பார்க்கும். மனசு காயப்படும் வேளையில், நாட்கள் கடந்துபோனாலும் ஆயிரம் பேர் சுற்றிலும் இருந்தாலும், "தன் தங்கை வருவாளா?" என்றுதான் எந்த அண்ணனின் கண்களும் ஏங்கும். அதேபோல எத்தனை உறவுகள் சூழ்ந்திருந்தாலும், "நம் அண்ணன் எங்கே?" என்று தேடுபவள் தங்கை. இறைவனின் படைப்பில் ஒருவரையொருவர் புரிந்து, மகிழ்ந்து, விட்டுக்கொடுத்து வாழ்கின்ற அந்த உறவு பணத்தாலோ பொருளாலோ அளவிட முடியாத ஒன்று.
காலம் மாறினாலும் இடம் மாறினாலும் அண்ணன்-தங்கை பாசம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். தலைமுறை தலைமுறைக்கும் கடந்து நிலைத்திருக்கும் இந்த அண்ணன்-தங்கை பாசம் என்பது அழியாத அன்பின் காவியம்; வாழ்க்கைக்கு அழகைச் சேர்க்கும் தொடரும் இனிமையான உறவு.