Short Story: வாழ நினைத்தால் வாழலாம்!

Su.tha Arivalagan
Aug 07, 2026,05:01 PM IST

- பசுங்கிளி


செல்லம்மாள் ஒரு கையில் துணிப்பையையும் மற்றொரு கையில் தன் நான்கு வயது செல்ல மகள் சித்ராவையும் பிடித்துக் கொண்டு நடையும் ஓடமுமாக ரயில் நிலையத்தை வந்து அடைந்தாள். ரயில் நகர ஆரம்பித்தது. வேகமாக ஓடிச் சென்று ரயிலில் ஏறிவிட்டாள் சித்ராவுடன் இருக்கையை தேடி கண்டாள்.


அந்த பெட்டியில் இரு வயதானவர்கள் அமர்ந்திருந்தனர். 75 வயது உடைய பெரியவர் சதாசிவமும் 70 வயதுடைய அவர் மனைவி மரகதம்மாள். செல்லம்மாவை பார்த்து மரகதம்மாள் புன்னகைத்து தன் அருகில் அமர வைத்தாள். செல்லம்மா உடனே சித்ராவும் அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் சன்னலுக்கு வெளியே பார்வைகளுடன் பழைய நினைவுகள் சென்றன. சித்ரா கொள்ளை ஆசையுடன் சிரிப்புடன் மரகதம்மாவையும், சதாசிவத்தையும் பார்த்தாள்.


மரகதம்மா சித்ராவை அழைத்து தன் மடியில் அமர்த்தி கொண்டாள். சித்ரா அத்தனை அழகு. கருகருவென்ற சுருள் கூந்தல், திராட்சை பழம்போல் மின்னல் ஒளியுடன் கண்கள், சிவந்த உதடுகள், முத்து போன்ற பற்கள், கோதுமை நிறம் கொண்ட மேனி செப்புச் சிலை போன்ற அழகு.


மரகதம்மாள் தன் கைப்பையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து சித்ராவிடம் கொடுத்தாள். குட்டிமா இதை சாப்பிடு என்றாள். சித்ரா சிரித்தவாறே தன் தாயை திரும்பி பார்த்தாள். 'வாங்குவதா வேண்டாமா' என்று தன் தாயின் அனுமதிக்காக. செல்லம்மா தலையசைத்தாள், வாங்கிக்கொள் என்று. சித்ரா பிஸ்கட்டை வாங்கி கொண்டாள். மரகதமும், சதாசிவமும் வியந்து போனார்கள். இந்த சிறிய வயதில் எவ்வளவு கட்டுப்பாடு. செல்லம்மாளின் வளர்ப்பு அப்படி.




செல்லம்மாள் மறுபடியும் சன்னலுக்கு வெளியே பார்த்து கொண்டு அமைதியாக இருந்தாள். மரகதம்மா செல்லம்மாவை பார்த்து, 'உன் பேர் என்னம்மா, உனக்கு எந்த ஊரு, அவசரமா வந்து ஏறுனீங்க, எங்கு போகணும்?' என்று கேட்டாள்.


செல்லம்மா மரகதம்மாவை பார்த்து தயங்கிக்கொண்டே பேசினாள், "எனக்கு திருநெல்வேலி பக்கம் கல்லிடைக்குறிச்சிம்மா. சென்னைக்கு போகலாம்னு வந்தோம்" என்றாள் தயங்கிக்கொண்டே. மரகதம்மாள் செல்லம்மாவை உற்று கவனித்தாள். சோகமே உருவான கண்கள், மனதில் பல குழப்பங்களுடன் காண்கிறாள், பாவம் என்று எண்ணிக்கொண்டு தன் கணவர் சதாசிவத்தை பார்த்தாள்.


சதாசிவம் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். சென்னையில் வசித்து வருகிறார்கள்.


சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று திருவிழாவை பார்த்து, விட்டுப் வந்து கொண்டுள்ளனர். மரகதம், சதாசிவம் தம்பதியருக்கு ஒரு ஆண் பிள்ளை. சங்கர். சென்னையில் படித்து முடித்து விட்டு வெளி நாட்டில் வேலையில் இருந்தான். மனைவி இரு குழந்தைகளுடன் சென்று அங்கு வசித்து வந்தான். வருடத்திற்கு ஒரு முறை தன் அம்மா, அப்பாவை

காண சென்னைக்கு வருவான். மரகதம்மாள் செல்லம்மாவை பார்த்து சென்னையில் எங்கு செல்ல வேண்டும் இரவு நேரமாகி விட்டது என்று கேட்டாள். செல்லம்மா அப்போது தான் தன் கைப்பையில் வைத்திருந்த முகவரியை தேடினாள். செல்லம்மாள் கணவனை இழந்தவள், வறுமையின் காரணமாக சென்னையில் உள்ள ஒரு செல்வந்தர் வீட்டிற்கு வயதான ஒரு அம்மாவை பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆட்கள் தேவை என்று பத்திரிக்கை விளம்பரத்தை பார்த்து அதை வெட்டி கைப்பையில் வைத்துக்கொண்டு வந்திருந்தாள்.


அவசரமாக வந்ததில் விளம்பரக்கடிதம் காணாமல் போயிருந்தது மறுபடியும் தேடிப்பார்த்தாள் கிடைக்கவில்லை.

பதட்டத்துடன் மரகதம்மாவை பார்த்து முகவரி காணவில்லை என்றாள், மரகதம்மா செல்லம்மாவின் கைகளைப் பிடித்து படப்படாதே நீயும் குழந்தையும் எங்கள் வீட்டிற்கு வாங்க. காலையில் பேசிக்கொள்ளலாம் என்று ஆறுதல்

கூறினாள். சதாசிவமும் தலை அசைத்தார். வேறு வழியின்றி செல்லம்மாவும் ஒத்துக்கொண்டாள் சென்னை ரயில் நிலையம் வந்தடைந்தார்கள். சதாசிவம் வீட்டு டிரைவர் அவர்களை அழைத்து செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தார். எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். இரவு உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு

இருந்தார்கள். பிறகு செல்லம்மாவுக்கும் சித்ராவுக்கும் ஒரு தனி அறை கொடுத்து இதில் படுத்து கொள்ளுங்கள்

நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று மரகதம்மாள் செல்லம்மாவின் தலையை தடவிக்கொடுத்து ஆறுதலாக

சொன்னாள். செல்லம்மாவும் சித்ராவும் தனி அறையில் நிம்மதியாக தூங்கினார்கள். அதி காலையில் பால் வண்டி

யின் மணி ஓசை கேட்டு மரகதம்மாள் எழுந்து பால் வாங்கினாள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு செல்லம்மாவும் விழித்து கொண்டாள். 


எழுந்து, வெளியே வந்து மரகதம்மாவை பார்த்து, 'காலை வணக்கம் அம்மா' என்று கூறினாள். மரகதம்மாவும் பார்த்து சிரித்தவாறே "குட்மார்னிங், நல்ல தூங்கினாயா" என்று கேட்டார். அனைவரும் காலை குளித்து விட்டு காலை தேநீர் சிற்றுண்டி எல்லாம் முடித்தார்கள். பிறகு மரகதம்மாவும், சதாசிவமும் செல்லம்மாவை அழைத்து, "முகவரியை தொலைத்துவிட்டாய். இனி எங்களோடு இருந்து விடுதாயா? எங்களுக்கும் யாரும் இல்லை. வயதான காலத்தில் தனியாக சிரமப்படுகிறோம். நாங்கள் உன்னையும் குழந்தையையும் பார்த்து கொள்கிறோம்" என்றார்கள். செல்லம்மாவும் ஒப்புக்கொண்டாள்.


செல்லம்மா பெரியவர்களை தாய் தகப்பன் போல் பார்த்து கொண்டாள். பெரியவர்களும் தன் மகளைப்போல் செல்லம்மாவை பார்த்து கொண்டார்கள். சித்ராவை நல்ல பள்ளியில் சேர்த்தார்கள். சித்ரா படித்து பெரியவளானாள். கல்வியில் சிறந்து விளங்கினாள். ஒரு அரசு பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது. செல்லம்மா மனதில் நிம்மதி அடைந்தாள். "நம்தான் படிக்கவில்லை, நம் பிள்ளை படித்து ஆசிரியை ஆகிவிட்டாள். அவள் பல பேருக்கு கல்வி கற்று தருவாள்" என்று நிம்மதி அடைந்தாள்.


வந்தோரை வாழ வைக்கும் சென்னை செல்லம்மாவையும் வாழ வைத்தது.