பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!

Su.tha Arivalagan
Sep 14, 2026,10:11 AM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நீ பேசும் போது 

பத்து வார்த்தையில் 

எட்டு வார்த்தை என்னைத்

திட்டத்தான் செய்கிறாய்!


ஏழு ஸ்வரங்களுக்குள்

எத்தனை ராகம் என்று 

அதையும் ரசிக்கிறேன் 

என்னவளே! 


நீ திட்டுவது கூட 

மோகன ராகம் தான்!

தித்திக்கும் திருநெல்வேலி 

அல்வா தான்! 




நீ பணி ஓய்வு 

பெற்றுவிட்டதால் 

நான் முழுநேரமும் 

உன் வசை மொழியை 


இசை மொழியாய் 

கேட்டுக்கொண்டு 

இருக்கிறேன் 

என்னவளே! 


மோனலிசா ஓவியமாய்ச்

சிரிக்கும் உன் முகத்திற்கு 

சினம் எனும் குணம் 

பொருத்தம் இல்லை பெண்ணே! 


நீ எத்தனை 

திட்டினாலும் 

உன் மேல் எனக்குக் 

கோபமே வருவதில்லை! 


இதற்கு என் மனம் மரத்துப் 

போனதாக அர்த்தம் அல்ல!

அந்த அளவுக்கு 

நேசிக்கிறேன் உன்னை!


சினந்து மகிழ்ந்து 

போராடி

வாழ்க்கை கடலில்

நீராடி


நம் அகவையும் 

அறுபதைத் தாண்டி விட்டது!

இறைவா இவளின் 

ஆயுள் ரேகையை அதிகப்படுத்து! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)