எந்தன் முருகன்!

Su.tha Arivalagan
Aug 03, 2026,04:56 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


கோயில் கோயில் ஆகச் சென்று 

வந்ததில்லை ஆனாலும் எந்தன் 

குமரன் எனக்குக் குறை

ஒன்றும் வைத்ததில்லை! 


ஆதி சிவன் மகன் தன்னை அப்படி  

ஒன்றும் நான் தொழுததில்லை!

இருப்பினும் அவன் காட்டிய

அன்புக்கு ஈடு இணை இல்லை! 


விரதங்கள் என்று எதுவும் நான் 

இருந்ததில்லை! ஆனாலும் அவன் 

எனக்கு உதவாமல் 

ஒரு போதும் இருந்ததில்லை! 


வேண்டுதல் என்று எதுவும் நான் 

வைத்ததில்லை! இருப்பினும்

எனக்கவன் அருளியதில்

எந்தக் குறையும் இல்லை! 




கோடி கோடியாகத் திருப்பணி

செய்யப் பணம் என்னிடம் இல்லை

ஆனால் அவன் அன்பைத் தவிரக்

கோடிகளை  எதிர்பார்ப்பதில்லை!


குற்றம் குறைகள் என்னிடம் 

இருந்தாலும் அவன் தாயுள்ளம்

என்னை ஒருபோதும் 

வெறுத்ததில்லை! 


புண்ணியம் 

செய்திருப்பேனோ

என்றால் அப்படியும் 

தெரியவில்லை! 


ஆனாலும் என்னோடு 

இருக்கிறான்!

அதுதான் அவனின்

அன்பின் எல்லை!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)