எழுத்தாளர் மனைவி!

Su.tha Arivalagan
Jul 14, 2026,02:28 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


எனக்காக எழுதுவார்! 

உலக அரசியல் எழுதுவார்! 

உலை அரிசிக்கு

வழி இருக்காது!


காலையிலேயே 

கற்பனையில் 

கனடா 

செல்வார்!


நான் காப்பித்தூள்

கடன் வாங்க 

கவலையோடு 

எழுந்திருப்பேன்! 




அவருடன்

செல்லும்போது

பெயர்  என்னவோ

பெரிய பெயர்தான்!


அதை வைத்து 

உப்பு புளி 

வாங்க 

முடியாது! 


பட்டிமன்றத்தில் 

இவர் பேசினால் 

பார் முழுதும்

வாழ்த்துரைக்கும்! 


அதை வைத்துப்

பசியாறவோ 

பணக்காரராகவோத்

துளியும் முடியாது! 


ஜரிகை வேஷ்டியும் 

தோள் மேல் துண்டும்

பார்க்க அழகாய்த் தான் 

இருப்பார்!


ஆனால் பசி வயிற்றைக்

கிள்ளும் போது

இவர் வறுமையில்

‌பாரதியும் தோற்றுப் போவார்!


இவர் எழுதாத 

பொருள் இல்லை! 

எதையும் வாங்க இவர் 

கையிலும் பொருள் இல்லை!


வாழ்க எழுத்தாளர்! 

நீங்கட்டும் அவர் வறுமை!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).