டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பை கைவிட.. பாகிஸ்தான் முன்வைக்கும் 3 நிபந்தனைகள்!
லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தனது பிடிவாதத்தைத் தளர்த்த முன்வந்துள்ளது. அதேசமயம், 3 நிபந்தனைகளையும் அது முன்வைத்துள்ளது.
அந்த 3 நிபந்தனைகள் என்னவென்றால், இந்தத் தொடர் தொடர்பான விவகாரங்களில் தங்களுக்குக் கூடுதல் நிதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
நடப்பு டி20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசம் நீக்கப்பட்டாலும், அந்த நாட்டு வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டிய பங்கேற்புத் தொகையை ஐசிசி வழங்க வேண்டும்.
வருங்காலத்தில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் ஏதேனும் ஒன்றை நடத்தும் உரிமையை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் என்று அந்த நிபந்தனைகள் கூறுகின்றன.
முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணித்தால் கடும் நிதி நெருக்கடியையும், ஐசிசி-யின் ஒழுங்கு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என பாகிஸ்தான் வாரியத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்தே, லாகூரில் நடைபெற்ற ஐசிசி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் இந்த நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புடன் கலந்தாலோசித்த பிறகு, பாகிஸ்தான் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் சம்மதிக்கும் என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபக்கம் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் இன்று லாகூர் செல்கிறார். அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் ஐசிசி அதிகாரிகளுடன் கூடிய முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.