சினிமாக்களை ஆதரியுங்கள்.. ஆனால் வாழ்க்கையிலிருந்து தள்ளி வையுங்கள்.. வினோதினி

Su.tha Arivalagan
Sep 28, 2025,01:46 PM IST

சென்னை: (நல்ல) சினிமாக்களை ஆதரியுங்கள். ஆனால் சினிமாவை வாழ்க்கையிலிருந்து தள்ளி வையுங்கள். குடும்பத்தைக் கவனியுங்கள். திறனை மேம்படுத்துங்கள். இந்த வாரம் ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். தயவு செய்து சினிமாவை வாழ்க்கையிலிருந்து தள்ளி வையுங்கள் என்று நடிகை வினோதினி வைத்தியநாதன் கூறியுள்ளார்.


கரூர் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே தலைவிரித்தாடும் சினிமா மோகம் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான விநோதினி வைத்தியநாதன் இதுகுறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரை:


நான் சினிமாவில்தான் பணிபுரிகிறேன். ஆனால் வெள்ளிக்கிழமை பிறந்தால் தியேட்டருக்கு வரும் எல்லா படங்களையும் ஏதோ பைபிள்போல் பார்ப்பதில்லை. என்னிடம் இந்த படம் பார்த்தீர்களா அந்தப்படம் பார்த்தீர்களா என்றால் நான் இந்தப்புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன் அல்லது சமீபத்தில் இந்த செய்தியைப்பற்றி படித்துத்தெரிந்துகொண்டிருந்தேன், அதை நீங்கள் படித்திருக்கிறீர்களா என்று கேட்பேன். இங்கு சினிமா மோகம் சினிமாத்துறையினரிடம் மட்டுமல்ல மக்களிடமும் அசிங்கமாக அபத்தமாக வியாபித்திருக்கிறது. எங்கும் சினிமா எதிலும் சினிமா. 




மீடியாக்ரிடியை (சுமார் தன்மையை) நமது பொதுபுத்தியில் புகட்டியிருக்கிறது சினிமா. இன்புளுயென்சர்களும் மளிகைக்கடைக்காரர்களும் ஜவுளி வியாபாரிகளும் சினிமாவில் தலைகாட்டுவதையே தங்களது வாழ்நாள் சாதனையாக பார்க்கின்றனர். பொழுதுபோக்கு என்பது தாண்டி சினிமாவின் பரப்புரைத்தன்மையினால் தொடர்ந்து அரசியல் தலைவர்களும் மக்களின் எண்ணங்களினுள் புக அந்த மீடியத்தைப்பயன்படுத்தி வந்துள்ளனர். இங்கு இது ஒரு பார்முலா போலவே ஆகிவிட்டது. சினிமாவில் சில காலம், சினிமாவில் தனது அரசியல் பயணத்திற்கான வித்தை பாடல்களிலும் தத்துவத்திலும் புகட்டி அதையே அரசியலுக்கு வரும்பொழுது தனது “மக்கள் பணி” “மக்கள் மீதுள்ள அக்கறை” என்று காட்டிக்கொள்வது. இதில் ரிவர்ஸ் இஞ்சினியரிங்கும் உள்ளது. 


அரசியலில் மட்டுமே தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் தங்களது இமேஜை சினிமா பிரபலம்போல் காட்டிக்கொள்வது, அவ்வாறு வேடமிட்டு ஸ்டேஜுடு காணொலிகளை “சிங்கமொன்று புறப்பட்டதே”, “புலி உருமுது” போன்ற பிஜியெம் வைத்து ஐடி விங் மூலம் பரவ விடுவது. ஆக சினிமாவையும் சினிமாத்தனத்தையும் அரசியலிலிருந்து பிரிக்கவே முடியாத நிலைமையை உருவாக்கி வைத்திருக்கோம். இதனால் நமது அரசியலின் தன்மையும் சினிமாவைப்போலவே வெறும் காகிதப்பூவாக மாயையாக இருக்கிறது. 


போட்டோ ஷூட்டுக்கள், விளம்பரமாக அங்கும் இங்கும் விமான நிலையத்தில் போஸ் கொடுப்பது, மேலோட்டமாக பஞ்ச் டயலாக் பாணியில் பேசுவது, சாதனைகளைப்பற்றி கேட்டால் பாடல் கம்போஸ் பண்ணுவது என எல்லாமே வெளிப்பூச்சு பேட்ச் வர்க்காக மட்டுமே இருக்கிறது. இது நமக்குத்தேவைதான். வீட்டில் உள்ள நமது குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த செலவிடவேண்டிய நமது நேரம் உழைப்பு பணம் இளமை அனைத்தையும் இருட்டடித்த சினிமா தியேட்டரினுள் எவனோ ஒருவனுடைய பாக்கெட் நிரம்புவதற்காக கண்ட குப்பையையும் வாரா வாரம் அவன் கூவிக்கூவி விற்கிறான் என்பதற்காக போய் பார்த்துவிட்டு நமக்கு அறிவார்ந்த தலைவர்கள் மட்டும் வேண்டுமென்றால் வானத்திலிருந்தா குதிப்பார்கள். 


திருமணம் முதல் கருமாதி வரை அனைத்திலும் சினிமாத்தனமான விஷயங்களைப் பொதுமக்களாகிய நாம் செய்துவிட்டு நமக்கு வரும் தலைவர்களிடம் மட்டும் ஆழ்ந்த சிந்தனையும் செயல்பாட்டையும் எதிர்ப்பார்ப்பது அறிவிலித்தனத்தின் உச்சம். You get the leader you deserve. இன்று இறந்த உயிர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும். இதில் அரசியல்கூட செய்யுங்கள். ஆனால் இதில் படம் மட்டும் போட்டுக்காட்டாதீர்கள். 


சினிமாவை மட்டும் நான் ஏன் சொல்கிறேன், மற்ற கலைகளைச்சொல்லவில்லையெனில் சினிமாதான் ஒன்றரை நூற்றாண்டாக ஜனரஞ்சகமான கலைவடிவமாக உள்ளது. எழுத்து நடனம் ஓவியம் நிகழ்த்துக்கலை போன்றவை மக்களை மேம்படுத்துமேதவிர மழுங்கடிக்காது. ஆனால் சினிமா அதன் தன்மையால் அனைத்தையும் மொன்னையான பொதுபுத்திக்கு கொண்டுவந்து விடுகிறது. மேலும், எழுத்தில் உள்ள வாசகனின் பார்டிசிபேஷன் சினிமாவில் தேவைப்படுவதில்லை. படுத்துக்கொண்டே பாப் கார்ன் சாப்பிடுக்கொண்டே பார்வையாளன் சினிமாவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதில் அவனது active participation என்று எதுவும் இல்லை. இது இரண்டு மூன்று தலைமுறையை சோம்பேரி பார்வையாளனாகவே மாற்றி வைத்திருக்கிறது. 


இன்று விஜய் நாளை யாரோ என்பது இங்கு கேள்வியல்ல. என்றும் சினிமா, சினிமாத்தனமாக சினிமாத்தனமயமாக்கப்பட்ட அரசியல் களம் மற்றும் சமூகம், கடந்த 50 ஆண்டுகளாக என்பதே உண்மை. அரசியல் களம் மாறுமா என்று தெரியவில்லை. சமூகமாவது மாறலாம். மாறவேண்டும். நமது அடுத்த தலைமுறையினருக்காகவாவது நாம் மாறித்தான் ஆகவேண்டும். (நல்ல) சினிமாக்களை ஆதரியுங்கள். ஆனால் சினிமாவை வாழ்க்கையிலிருந்து தள்ளி வையுங்கள். குடும்பத்தைக் கவனியுங்கள். திறனை மேம்படுத்துங்கள். இந்த வாரம் ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். தயவு செய்து சினிமாவை வாழ்க்கைமுறை ஆக்காதீர்கள். தயவுசெய்து.