தீயாய் பரவும் வதந்தி.. பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்.. பீதி தேவையில்லை என அரசு விளக்கம்

Su.tha Arivalagan
Mar 12, 2026,10:40 AM IST

சென்னை: காஸ் சிலிண்டர்கள் குறித்து முதலில் பீதி கிளம்பியது. இப்போது பெட்ரோல், டீசல் கிடைக்காது என்று வதந்தி பரவி வருகிறது. இதனால் சென்னையில் மக்கள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் குவிவதைப் பார்க்க முடிந்தது. ஆனால் இது தேவையில்லா பீதி. இந்தியாவில் 90 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் டீசல் இருப்பில் உள்ளதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.


அதேபோல தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த 21 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மக்கள் பீதி அடையாமல் தேவையான அளவுக்கு மட்டுமே பெட்ரோல் டீசலை வாங்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


சென்னை உள்பட பல நகரங்களில் நாளை பெட்ரோல் டீசல் கிடைக்காது. இன்றே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வதந்தி  காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக மக்கள் கார், டூவீலர்களில் பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். பலர் வாகனங்களில் நிரப்பியதோடு, கையோடு வாட்டர் கேன்களையும் கொண்டு வந்தனர். அதிலும் நிரப்பிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.




பெட்ரோல் பங்குகளில் வதந்திகளை நம்பி இப்படிக் கூட்டமாக வந்தால் இருப்பதும் வேகமாகத் தீர்ந்து விடுமே என்று புலம்பியதைப் பார்க்க முடிந்தது. 


மக்கள் முதலில் வதந்திகளை நம்புவதைக் கைவிட வேண்டும். இதுபோன்ற நேரங்களில் முதலில் பீதி அடைவதை நிறுத்த வேண்டும். வழக்கமான முறையில் இயல்பான முறையில் பெட்ரோல், டீசல் வாங்குவது, சிலிண்டர்களுக்குப் புக் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். சிக்கல் இருக்கிறதுதான்.. அதேசமயம், எல்லோரும் பீதி ஆகி மொத்தமாக வாங்கக் குவிந்தால் வேகமாக ஸ்டாக் தீர்ந்து சிக்கல் பெரிதாகி விடும் இல்லையா.


எனவே நிதானம் காப்போம்.. பேனிக் பையிங்கில் இறங்கி நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் தவிர்ப்போம்.