பெருந்தலைவர் காமராஜர்.. விருதுநகர் மண்ணில் வீரம் முளைத்த நாள் !
Jul 15, 2026,03:58 PM IST
- முனைவர் கோ. லதா
விருதுநகர் மண்ணில் வீரம் முளைத்த நாள்
கருப்புச் சட்டையில் காந்தி நடந்த நாள்
ஜூலை பதினைந்தில் ஜோதி பிறந்த நாள்
கல்விக்கண் திறந்த காமராசர் வந்த நாள்
நெசவாளர் இல்லத்தில் நேர்மை வளர்ந்தது
வறுமை நடுவிலும் வைரம் ஜொலித்தது
பள்ளி படிப்பை பாதியில் விட்டாலும்
நாட்டுப் படிப்பை நெஞ்சில் ஏற்றான்
இளமை தொட்டே இந்தியம் சுமந்தான்
இரும்பு கரங்களால் சங்கிலி உடைத்தான்
சிறை சென்றான் சிங்கமென நிமிர்ந்தான்
சுதந்திரக் கனவை சொந்தமென ஆக்கினான்
ஐம்பத்து நான்கில் ஆட்சி ஏற்றான்
ஆயிரம் கனவை அடித்தளம் இட்டான்
பசியோடு வரும் பாலகன் கண்டான்
பசி தீர்க உணவு திட்டம் தந்தான்
மதிய உணவு மாணவர் வாழ்வானது
மடியில் இருந்த ஏழ்மை மறைந்தது
ஊருக்கு ஒரு பள்ளி உருவாக்கினான்
ஒவ்வொரு வீட்டிலும் ஏடு சேர்த்தான்
இலவச சீருடை இளைஞர் அணிந்தனர்
இலவச நோட்டும் புத்தகம் பெற்றனர்
படிக்க வசதியில்லா பிள்ளைகள் எல்லாம்
பள்ளி வாசலை பார்து ஓடினர்
பதினேழாயிரம் பள்ளிகள் திறந்தான்
பட்டதாரிகளை பல்லாயிரம் ஆக்கினான்
ஆசிரியர் கை வலுப்படுத்தினான்
அறிவுச் சுடரை ஆயிரம் ஏற்றினான்
கருப்பு வேட்டி கதர்ச் சட்டையுடன்
கர்மவீரர் என்ற பெயர் சுமந்தான்
ஆடம்பரம் அறியா எளிமை வடிவானான்
ஊழல் பாராத உத்தமர் ஆனான்
சாதி மதம் பாராத தலைவனானான்
சாய்ந்தோரை எல்லாம் தூக்கி நிறுத்தினான்
"நான் ஒரு சாதாரண மனிதன்" என்றான்
"மக்கள் சேவையே என் மூச்சு" என்றான்
மாடு மேய்த்த கை மகுடம் தொட்டது
மண்ணில் பிறந்தவன் விண்ணைத் தொட்டது
கல்வி என்னும் கண் திறந்து வைத்தான்
காலம் எல்லாம் வாழும் பெயர் வைத்தான்
இன்றும் கிராமத்தில் பள்ளி இருக்கும்
இன்றும் மதிய உணவு மணக்கும்
அந்த மணத்தில் காமராசர் வாழ்கிறார்
அந்த சுவையில் அவர் உழைப்பு தெரிகிறது
ஒன்பது ஆண்டு ஆட்சி செய்தாலும்
ஒன்பது தலைமுறைக்கு விதை விதைத்தான்
அவன் தந்த கல்வியால் நாம் வளர்கிறோம்
அவன் தந்த உணவால் நாம் எழுகிறோம்
ஜூலை பதினைந்து வந்தால் நினைவோம்
கர்மவீரர் பிறந்த நாளை போற்றுவோம்
ஏழைக்கு ஏடு தந்த தலைவனை
எந்நாளும் தமிழர் நெஞ்சில் ஏற்றுவோம்
வாழ்க காமராசர் புகழ் வாழ்க
வளர்க அவர் கல்வி கனவு வாழ்க
கல்விக்கண் திறந்த காமராசர்
1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள், விருதுநகரில் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார் காமராசர். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் காமராசன். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்தது.
பள்ளிக்கூடத்தை விட்டு வந்தாலும், படிப்பின் மீதும் நாட்டின் மீதும் உள்ள பற்று அவரை விடவில்லை. துணிக்கடையில் வேலை பார்த்துக்கொண்டே, காந்தியின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சிறை சென்றார், அடி வாங்கினார், ஆனால் மனம் தளரவில்லை.
1954-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக்கூடமே இல்லை. ஏழைக் குழந்தைகள் பசியால் பள்ளிக்கு வர முடியாமல் தவித்தனர்.
"பசித்த வயிற்றோடு கல்வி வராது" என்பதை உணர்ந்த காமராசர் ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்தார். அதுதான் *"மதிய உணவுத் திட்டம்"*. இலவசமாக சுடச்சுட சாதம், சாம்பார் கொடுத்தால் குழந்தைகள் பள்ளிக்கு ஓடி வருவார்கள் என்று நம்பினார். பலர் கேலி செய்தார்கள். "அரசாங்கம் சமையல் செய்யுமா?" என்று கேட்டார்கள். ஆனால் காமராசர் பின்வாங்கவில்லை.
அத்தோடு நிற்கவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு உயர்நிலைப் பள்ளி என்று பள்ளிக்கூடங்களை பெருக்கினார். ஆசிரியர்களை அதிகமாக நியமித்தார். ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச நோட்டு கொடுத்தார்.
அவருடைய ஆட்சிக்காலத்தில் 17,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டன. படிக்க வசதியில்லாமல் வீட்டில் இருந்த லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கூட வாசலை மித்தார்கள். "படித்தால் மட்டுமே முன்னேற முடியும்" என்று நம்பிய அவர், கல்விக்காக தன் சொந்த சம்பளத்தையும் செலவு செய்தார்.
ஆடம்பரம் இல்லை. ஊழல் இல்லை. "நான் ஒரு சாதாரண மனிதன். மக்களுக்கு சேவை செய்ய வந்தேன்" என்று வாழ்ந்தார். கருப்பு சட்டை, வெள்ளை வேட்டி. எளிமையின் சின்னமாக வாழ்ந்து மறைந்தார்.
அவர் முதலமைச்சராக இருந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. அதனால்தான் மக்கள் அவரை *"கல்விக்கண் திறந்த காமராசர்", "கர்மவீரர்", "பெருந்தலைவர்"* என்று அன்போடு அழைக்கிறார்கள்.
ஒரு மாடு மேய்த்த சிறுவனுக்கு ஏடு தந்தவர். ஒரு ஏழை வீட்டு பிள்ளைக்கு பள்ளிக்கூட கதவை திறந்தவர். இன்று நாம் படிக்கும் ஒவ்வொரு பள்ளியிலும், சாப்பிடும் ஒவ்வொரு மதிய உணவிலும் காமராசரின் உழைப்பு இருக்கிறது.
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)