தமிழ்நாட்டில் துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

Su.tha Arivalagan
Mar 23, 2026,03:06 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துரந்தர் 2 படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.


பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர் 2' திரைப்படம் கடந்த மார்ச் 19-ம் தேதி வெளியானது.  இந்த படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவிலேயே பல கோடிகளை ஈட்டி வசுலில் சாதனை படைந்தது. தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) நெருங்கி வரும் நிலையில், இந்தத் திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஷீலா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.


படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், மற்றொன்றுக்கு எதிராகவும் இருப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 




தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இதுபோன்ற அரசியல் கருத்துகள் வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் இந்தப் படத்தை திரையிட தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.


இந்த முறையீட்டைப் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது: படம் ஏற்கனவே வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதனை அவசர முறையீடாக ஏற்க மறுத்து, உரிய ஆதாரங்களுடன் முறையாக மனுத் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.