பெட்ரோல், டீசல்,சிலிண்டர் தட்டுப்பாடு...மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை:முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை: போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. இந்நிலையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடுகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர்களை புக் செய்வதிலும் சிக்கல் நிகழ்ந்து வருகிறது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு - பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது.
இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்! என தெரிவித்துள்ளார்.