ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!

Meenakshi
Apr 25, 2025,01:59 PM IST

சென்னை: ப்ளஸ் 1 பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 24வது கேள்விக்கு பதில் எழுதியிருந்தாலே 2 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 5ம் தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 23 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதி இருந்தனர். இத்தேர்வை மாநில முழுவதும் அமைக்க்பட்டுள்ள 3,316 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 44,236 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முறைகேடுகளைத் தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. 154 வினாத்தாள் கட்டக்காப்பு மையங்களில் 24  மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.




இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ப்ளஸ் 1 பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 24வது கேள்விக்கு எந்த பதில் அளித்திருந்தாலும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் எந்த பதிலை எழுதி இருந்தாலும் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதே போல, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாட பொதுத்தேர்வில், ஒரு மதிப்பெண் பிரிவில் கேட்கப்பட்டதொரு கேள்வியும் தவறாக கேட்கப்பட்டதால், அந்த கேள்விக்கும் மாணவர்கள் எந்த பதிலை எழுதியிருந்தாலும் ஒரு மதிப்பெண் வழங்கிட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை  அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.