தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்.. ஆர்வத்துடன் தேர்வு எழுதும் மாணவர்கள்

Manjula Devi
Mar 03, 2025,10:23 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 


தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தில் படித்த பன்னிரண்டாம் மாணவர்களுக்கான பொது தேர்வுகள் இன்று காலை 10 தொடங்கியது. மாநில முழுவதும் 7,518 பள்ளிகளை  சேர்ந்த 8.21 லட்சம் மாணவ மாணவியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்காக 3316 மையங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிறப்பு தனி தேர்வாளர்கள் 20,000 பேர்  தேர்வு எழுதுகின்றனர்.




தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வுகளுக்காக மாணவர்கள் ஒன்பது நாற்பத்தி ஐந்து மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்பட்டு பத்து முதல் 10.15 வரை கேள்வித்தாள்களை படித்துப் பார்க்கும் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 10. 15 முதல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெற்று வரும் தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்ட வாரியாக சிறப்பு கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14417 என்ற இலவச உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு தேர்வுகள் தமிழ் மொழிதேர்வுடன் தொடங்கியது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.அதே சமயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களை சந்தித்து நல்லா எழுதுங்க மாணவர்களே எனக்கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.