அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
தேனி: ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது பிரதமர் மோடி உள்ளார். தமிழ்நாட்டை மோடி தத்தெடுத்து நாட்டில் முதன்மை மாநிலமாக மாற்றுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், ஊழல் என்றால் முதலில் நினைவிற்கு வருவது திமுக தான். தற்போது மாஃபியா மற்றும் ரவுடி ராஜாங்கம் தான் நடைக்கிறது. அதுமட்டுமின்றி போதை மருந்து கடத்தலில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக மாறி வருகிறது. கங்காரு குட்டி போல் தந்தையின் பாதுகாப்பில் இருக்கும் துணை முதல்வர் எங்களை விமர்சிக்கிறார்.
ஓபிஎஸ் அம்மாவின் உன்மை தொண்டர். அவரும் வருவார் என நம்புகிறேன். ஓபிஎஸ் தர்ம யுத்தம் துவங்காமல் இருந்தால் சசிகலா தலைமையில் ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வந்திருப்பார் இது உங்களுக்கே தெரியும். 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கு உன்மையான விடியல் வர உள்ளது. ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது பிரதமர் மோடி உள்ளார். தமிழ்நாட்டை மோடி தத்தெடுத்து நாட்டில் முதன்மை மாநிலமாக மாற்றுவார்.
ஊழலை ஒழிப்போம் என்று பேசும் விஜய், தனது படத்திற்கான டிக்கெட் பிளாக்கில் விற்பதை எப்போதாவது தடுக்க முடிந்ததா? 100 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய் வரை விற்பதை ஒழிக்காதவர் நாட்டின் ஊழலை எப்படி ஒழிப்பார்? வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு கொள்கை எதிரி, புடலங்காய் எதிரி என்று பேசி வரும் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.