பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் ...கூட்டணி தகவல் உண்மை தானா?
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையை நிரூபிக்கும் வகையில், வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்புக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்தக் கூட்டத்திற்காக மதுராந்தகம் பகுதியில் பிரம்மாண்டமான பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் வழக்கமாக இடம் பெறும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர்களின் படங்களுடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் வரிசையில் அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் புகைப்படம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த தேர்தல்களில் அதிமுக-விலிருந்து பிரிந்து தனித்து நின்ற தினகரன், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை இந்தப் பேனர் உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையில், தினகரனின் புகைப்படம் பாஜக-வின் அதிகாரப்பூர்வ பேனரில் இடம் பெற்றது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
என்டிஏ கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் இணைந்து விட்டதாகவும், சமீபத்தில் ரகசியமாக டில்லி சென்று வந்த அவருடன் பாஜக தலைவர் கூட்டணி பேசி முடித்து விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்து டிடிவி தினகரன் தரப்பிலோ, என்டிஏ கூட்டணி சார்பிலோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் கூட்டணி குறித்து வெளியான தகவல் உண்மை தான் என்பது போல் இந்த பேனர் உள்ளது.
இந்த பொதுக்கூட்டமானது வெறும் தேர்தல் பிரச்சாரமாக மட்டும் பார்க்கப்படாமல், தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான 'மூன்றாவது அணியை' அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியை நிலைநிறுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அது மட்டுமல்ல இன்னும் ஓரிரு நாளில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சி ஒன்று வந்து இணைய உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமியே கட்சி நிர்வாகிகளிடம் கூறி இருப்பதால், பாகம அன்புமணி, அமமுக டிடிவி தினகரனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் அடுத்து இணைய போவது யார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.