தேர்தல் களம் காண தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!

Su.tha Arivalagan
Jan 23, 2026,11:33 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகம் வருகிறார்.


கேரளாவில் பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு, பிரதமர் மோடி மதியம் 1.15 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 2.15 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்குச் செல்கிறார்.


மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஒரே மேடையில் பங்கேற்கிறார். பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். 




சமீபத்தில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அமமுக இக்கூட்டணியில் இணைந்த பிறகு நடைபெறும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


மாலை 3.10 மணியளவில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியின் அதிகாரப்பூர்வ பிரசாரத்தை அவர் இங்கிருந்து தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து பாஜக - அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரதமர் வருகையைத் தொடர்ந்து அடுத்தடுத்து அமித் ஷா உள்ளிட்ட மற்ற பாஜக தலைவர்களும் தமிழ்நாட்டுக்குப் படையெடுக்கவுள்ளனர் என்று கூறப்படுகிறது. 


உரையை முடித்த பிறகு, மாலை 4.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்வார்.


பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' (Red Zone) அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் பணிகளை எஸ்பிஜி (SPG) அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.


தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் தொடங்கியுள்ள நிலையில், பிரதமரின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது