மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

Su.tha Arivalagan
Apr 18, 2026,09:30 PM IST
டெல்லி: நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று இரவு 8:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில், எதிர்க்கட்சிகளின் போக்கைக் கடுமையாகச் சாடிய பிரதமர், நாட்டின் பெண் குழந்தைகளிடமும் தாய்மார்களிடமும் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த மசோதா போதிய ஆதரவில்லாமல், தோல்வி அடைந்தது. இதை தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக எதிர்க்கட்சிகள் வர்ணித்து வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று   இரவு நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலமாக உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:

இன்று என் உள்ளம் கனத்திருக்கிறது. 21-ஆம் நூற்றாண்டின் இந்தியப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தால் பெண்களின் பல ஆண்டுகாலக் கனவுகள் இன்று சிதைக்கப்பட்டுள்ளன.



மசோதா தோல்வியடைந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி அதைக் கொண்டாடினர். இது வெறும் மேஜையைத் தட்டும் சத்தம் அல்ல; இது இந்தியாவின் பெண் குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி போன்ற வாரிசு அரசியல் கட்சிகள், பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாறினால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சுகின்றன. நாட்டின் பெண் சக்தியை இவர்கள் மிகச் சாதாரணமாகக் கருதிவிட்டனர்.

எதிர்க்கட்சியினர் செய்த இந்த பாவத்திற்கு மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று பிரதமர் எச்சரித்தார். ஒரு பெண் பல விஷயங்களை மறக்கலாம், ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை அவள் ஒருபோதும் மறக்க மாட்டாள். இந்தத் துரோகத்தை வரலாறு மன்னிக்காது. அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மகளிர் மேம்பாட்டிற்கும் இழைக்கப்பட்ட இந்த அநீதி, ஒவ்வொரு பெண்மணியின் மனதிலும் நீங்காமல் இருக்கும்.

2029 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்யத் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறோம். மசோதா தற்காலிகமாகத் தோல்வியடைந்தாலும், மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கான அனைத்துத் தடைகளையும் நீக்கி, அதை நிச்சயம் சாதிப்போம் என்றார் பிரதமர் மோடி.