தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Su.tha Arivalagan
Dec 25, 2025,01:56 PM IST

புதுடெல்லி: உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கத்தீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன்' தேவாலயத்தில் நடைபெற்ற காலை நேரத் திருவழிபாட்டில் இன்று கலந்துகொண்டார்.


இன்று காலை தேவாலயத்திற்கு வருகை தந்த பிரதமரை, டெல்லி பேராயர் பால் ஸ்வரூப் மற்றும் திருச்சபை நிர்வாகிகள் இன்முகத்துடன் வரவேற்றனர். தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையின் போது, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் போற்றும் கரோல் கீதங்கள் மற்றும் புனிதப் பாடல்களைப் பிரதமர் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.


தேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவும், பிரதமருக்காகவும் தேவாலயத்தில் பிரத்யேகப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. வழிபாட்டிற்குப் பிறகு, அங்கிருந்த கிறிஸ்தவப் பெருமக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி தனது நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.




கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, டெல்லி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வழிபாட்டில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அன்பு, அமைதி மற்றும் கருணை ஆகிய உன்னத விழுமியங்கள் இந்த நன்னாளில் நம் சமூகத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஓங்கச் செய்யட்டும் எனத் தெரிவித்துள்ளார்.


கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் திருநாட்களில் தேவாலயங்களுக்குச் செல்வதையும், திருச்சபைத் தலைவர்களைச் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது