ஜைன துறவி வித்யானந்த் மகாராஜ் நூற்றாண்டு விழாவில்.. பிரதமர் மோடிக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம்
டெல்லி: ஜைன துறவி ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்ம சக்கரவர்த்தி என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜைன ஆன்மிகத் தலைவர்களில் ஒருவரும், சமூக சீர்திருத்தவாதியுமான ஆச்சார்ய வித்யானந்த் ஜி மகாராஜின் 100வது பிறந்தநாளைக் கௌரவிக்கும் ஒரு வருட கால விழா தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அகிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜ் ஏப்ரல் 22, 1925 அன்று கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் கிராமத்தில் பிறந்தார். நவீன காலத்தின் தலைசிறந்த ஜைன அறிஞர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். இவர் 8,000-க்கும் மேற்பட்ட ஜைன ஆகம வசனங்களை மனப்பாடம் செய்தவர்.
'ஜைன தர்ஷன்', 'அனேகாந்த்வாத்', மற்றும் 'மோக்ஷமார்க் தர்ஷன்' உள்ளிட்ட ஜைன தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்து 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார்.
இவரது நூற்றாண்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போதுதான் அவருக்கு தர்ம சக்கரவர்த்தி பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டது.