ஜோர்டானில் பிரதமர் நரேந்திர மோடி.. 2 நாள் சுற்றுப்பயணத்தில் என்னவெல்லாம் காத்திருக்கு?
- கலைவாணி கோபால்
அம்மான்: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜோர்டான் சென்றுள்ளார். அவருக்கு அங்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜோர்டான் சென்ற பிரதமர் மோடிக்கு, அம்மான் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோர்டானின் மன்னரான இரண்டாம் அப்துல்லா அவரை நேரில் வந்து வரவேற்று கட்டித் தழுவி வரவேற்றார். அதுமட்டுமல்லாமல் இந்திய பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி நடனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இந்திய பாரம்பரியத்துடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நீர்வள மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பெட்ரா மற்றும் எல்லோரா இடையே இரட்டை ஒப்பந்தம், 2025-2029 ஆண்டுகளுக்கான கலாச்சார பரிமாற்றத் திட்டத்தை புதுப்பித்தல், டிஜிட்டல் மாற்றத்திற்காக மக்கள் தொகை அளவில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் ஒத்துழைப்பு ஆகியவை அதில் முக்கியமானவை.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)