GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி
Sep 04, 2025,08:59 PM IST
டெல்லி: ஜிஎஸ்டி வரிச் சீரமைப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் வலுப்படும், வர்த்தகம் எளிதாகும் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை மேம்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய ஜிஎஸ்டி வரிச் சீரமைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை இருந்த அடுக்குகள் நீக்கப்பட்டு 2 விதமான வரிச் சீரமைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சுதந்திர தின உரையின்போது, அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற எங்களது நோக்கத்தைப் பற்றிப் பேசியிருந்தேன்.
பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஜிஎஸ்டி விகிதத்தை பரந்த அளவில் பகுத்தறிவுடன் மாற்றுதல் மற்றும் செயல்முறை சீர்திருத்தங்கள் குறித்த விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது பொதுமக்கள், விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.