ஜெகதீப் தன்கர் விரைவில் குணமடைய வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Su.tha Arivalagan
Jul 22, 2025,07:04 PM IST

டெல்லி: முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடி, தன்கர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். 


தன்கரின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில மணி நேரங்களில் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தன்கர் திங்கட்கிழமை இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அவரது ராஜினாமா தற்போது ஏற்கப்பட்டு விட்டது.




இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் தன்கர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜி, இந்திய துணை ஜனாதிபதி உட்பட பல பதவிகளில் நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும்போது ராஜினாமா செய்த மூன்றாவது துணை ஜனாதிபதி தன்கர் ஆவார். இதற்கு முன்பு வி.வி.கிரி மற்றும் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்தனர். ஆனால், தன்கருக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை.


தனது ராஜினாமா கடிதத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு தன்கர் நன்றி தெரிவித்துள்ளார்.