தீவிரவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தான் பிழைக்கும்.. இல்லாவிட்டால்.. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி பேச்சு

Manjula Devi
May 12, 2025,09:04 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக உரை நிகழ்த்தினார். அப்போது பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டதாகவும், தீவிரவாதத்தை பாகி்ஸ்தான் கைவிடாவிட்டால் அது பிழைக்க முடியாது என்றும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பாகிஸ்தானின் தீவிரவாத முகத்தை தோலுரித்தது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கிப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.


பிரதமர் மோடியின் உரையிலிருந்து:



கடந்த சில நாட்களில் நமது நாட்டின் திறமை மற்றும் பொறுமையை உலகமே பார்த்து தெரிந்து கொண்டது. நமது படையினருக்கு நான் சல்யூட் செய்கிறேன். ராணுவம், உளவுத்துறை, விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். 


ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. நமது மக்களின் உணர்வு அது. தீவிரவாதிகளை அழிக்க நமது படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. நமது படையிரினரின் தாக்குதலை பாகிஸ்தானும், தீவிரவாதிகளும் எதிர்பார்க்கவில்லை.


பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். நமது நாட்டையும், உலகத்தையும் அது உலுக்கி விட்டது. விடுமுறையை குடும்பத்தினருடன் கொண்டாடிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது மதம் என்ன என்று கேட்டு அதன் பிறகு கொன்றுள்ளனர் தீவிரவாதிகள். கருணையே இல்லாமல் மக்களைக் கொன்றுள்ளனர் தீவிரவாதிகள்.


பஹல்காம் தாக்குதல் பெரும் மன வேதனை:


பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும்  மன வலியைக் கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் இருந்த தீவிரவாதிகளின் கட்டுமானங்களை மட்டும் நமது படையினர் தகர்க்கவில்லை. மாறாக, அவர்களது துணிச்சலையும், தைரியத்தையும் சேர்த்து தகர்த்திருக்கிறார்கள்.  இந்திய ஏவுகணைகளும், டிரோன்களும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதன் மூலம் அவர்களது துணிச்சலையும் சேர்த்து தகர்த்திருக்கின்றன. நமது தாக்குதல் பலமாக  இருக்கும் என்று அவர்கள் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.


இந்தியாவின் மகள்கள், சகோதரிகளின் நெற்றி குங்குமத்தை அகற்றினால் என்ன நேரிடும் என்பதை இப்போது தீவிரவாதிகள் புரிந்து கொண்டிருப்பார்கள். பஹல்காம், தீவிரவாதத்தின் கோர முகத்தை உலகுக்குக் காட்டியுள்ளது. ஆனால் அந்தத் தாக்குதலுக்குப் பிறகு நாடு வலிமையுடனும், ஒற்றுமையுடனும் திரண்டு நின்றது.  நமது படையினர் குறி வைத்து தாக்குதல் நடத்தினர்.  நமது உறுதியான நடவடிக்கையை உலகமே பார்த்தது.


தீவிரவாதத்தின் துணிச்சலை தகர்த்து விட்டோம்




பஹவல்பூரும், முரிட்கேவும், தீவிரவாதத்தின் சர்வதேச பல்கலைக்கழகங்களாக திகழ்ந்தவை. அவற்றை நாம் தகர்த்து விட்டோம். பாகிஸ்தான் நமது பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், ராணுவ தளங்கள், பொதுமக்களின் வீடுகளைக் குறி வைத்தது. ஆனால் நமது தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பல தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் விரக்தியில் மூழ்கிப் போனது. தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு உதவுவதற்குப் பதில்,நம்மை அவர்கள் தாக்கினர். ஆனால் நாம் பாகிஸ்தானின் இதயத்தில் தாக்கினோம். கடந்த 3 நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத சேதத்தை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.


பாகல்கோட்டில் நடந்த சர்ஜிகல் ஸ்டிரைக்குப் பிறகு, தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் இருக்கிறது என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துக் காட்டியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான புதிய போக்கை இது வெளிப்படுத்தியுள்ளது.  யாராவது இந்தியாவைத் தாக்கினால் அதன் வேரைக் குறி வைத்து இனி தாக்குவோம். தீவிரவாதத்தின் வேர் அடியோறு அறுக்கப்படும்.


அணு ஆயுத மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்


இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற மிரட்டல் எல்லாம் இனி பலிக்காது. அப்படி மிரட்டுவோர் மீதுகடுமையான நடவடிக்கை எடுப்போம்.


தீவிரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவு தரும் அரசையும் நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதை உலகமே பார்த்தது. பாகிஸ்தானின் ஆதரவுடன்தான் அங்கிருந்து தீவிரவாதம் பரப்பப்படுகிறது என்பதற்கு இதுவே சான்றாகும். இந்தியாவைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுப்போம்.


ஆபரேன் சிந்தூர் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. நமது பலத்தை பாலைவனம், மலைகள், தரைப் பகுதி என நாம் நிரூபித்துக் காட்டியுள்ளோம். 


பாகிஸ்தான் கெஞ்சியதால் தாக்குதல் நிறுத்தம்




நமது தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியது.  நமது தாக்குலால் அவர்களுக்கு மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தனது முகத்தைக் காக்க உலக நாடுகளிடம் உதவி கோரியது பாகிஸ்தான்.  இதன் காரணமாகவே, மே 10ம் தேதி பிற்பகலில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நமது டிஜிஎம்ஓவை அணுகினார்கள். அந்த சமயத்தில் நாம் அவர்களது அடிப்படைக் கட்டமைப்புகளை தகர்த்திருந்தோம். தீவிரவாத முகாம்களை அழித்து விட்டோம். 


இனிமேல் தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் மண்ணில் ராணுவத்  தாக்குதலை நடத்த மாட்டோம் என்று பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது. இதனால் அவர்களது கோரிக்கையை நாம் பரிசீலித்தோம். இப்போதைக்கு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிப்போம்.


தீவிரவாதத்தை விட்டால் பாகிஸ்தான் பிழைக்கும்


இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தால் அது தீவிரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் குறித்தும் மட்டுமே இருக்கும். நமது நிலை இதில் தெளிவாக உள்ளது. தீவிரவாதமும், வர்த்தகமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக போக முடியாது. இதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.


இன்று புத்த பூர்ணிமா. கடவுள் புத்தர் அமைதி வழியை நமக்குப் போதித்துள்ளார். அதை நாம் கடைப்பிடித்து வருகிறோம்.

 

பாகிஸ்தானும், அதன் அரசும் தீவிரவாதத்தை அழிக்காவிட்டால் அது அழிந்து போய் விடும். பாகிஸ்தான் உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்றால் தீவிரவாதத்தை அது கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.