திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. அம்ரித் பாரத் ரயில்.. தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை: கேரள மாநிலத் தலைநகர் திருவனநந்தபுரத்திலிருந்து தமிழ்நாட்டின் தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திருவனந்தபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.
16121 / 16122 என்ற எண்கள் கொண்ட இந்த அம்ரித் பாரத் ரயிலானது, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலாகும். வந்தே பாரத் ரயில்களைப் போல நவீன வசதிகள் கொண்டவை, ஆனால் இதில் ஏசி வசதி கிடையாது. முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி இல்லாத ரயிலாகும். இது சாதாரண மக்களுக்கான அதிவேக ரயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 22 பெட்டிகள் இதில் இடம் பெற்றிருக்கும். அதில், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 8 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் மற்றும் 1 சமையல் அறை பெட்டி (Pantry Car) ஆகியவை அடங்கும்.
திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை (மதியம் 1:20), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக இரவு 11:45 மணிக்கு தாம்பரத்தைச் வந்தடையும்.
இந்த ரயிலின் வழக்கமான சேவை நாட்கள் மற்றும் நேர அட்டவணையைத் தென்னக ரயில்வே விரைவில் முறைப்படி அறிவிக்க உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் - நியூ ஜல்பைகுரி இடையே ஒரு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.