அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்.. 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

Manjula Devi
May 22, 2025,05:00 PM IST

டெல்லி: நாடு முழுவதும் அதி நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 103 அமிர்த பாரத் ரயில் நிலையங்களை இன்று காலை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.


இந்திய ரயில்வேயை நவீனமயமாக்குவதில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விரைவான வளர்ச்சியைக் மேம்படுத்தும் நோக்கில், அமிரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் 1300 ரயில் நிலையங்களை பராமரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 86 மாவட்டங்கள் இதில் அடங்கும். முதற்கட்டமாக நாடு முழுவதும் 103  ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.




குறிப்பாக அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட தென் மாநிலங்களான தமிழ்நாட்டில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், போளூர், திருவண்ணாமலை, விருதாச்சலம், சாமல்பட்டி, குழித்துறை, சூலூர்பேட்டை மற்றும்  கர்நாடகாவில் 5 ரயில் நிலையங்கள், தெலுங்கானாவில் மூன்று ரயில் நிலையங்கள்,கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் உள்பட 19 ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.


அதாவது சுத்தமான குடிநீர் வசதிகள், காத்திருப்பு அறைகள், எஸ்கலேட்டர் வசதிகள், உணவு விடுதிகள், இலவச வைஃபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.




இந்த நிலையில் நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று காலை  பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.  ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து காணொளி வாயிலாக அம்ரித் பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.


இதனைத் தொடர்ந்து 26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை அடுத்து அம்ரித் பாரத் ரயில் திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.