மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. மதுரை கூட்டத்தில் பங்கேற்பதாக தகவல்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 28ம் தேதி அவர் மதுரையில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஜூரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகியவை தங்களது கூட்டணிகளை பலப்படுத்தி வருகின்றன. ரகசியமான முறையில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களும் நடந்து வருகின்றன.
அதிமுகவைப் பொறுத்தவரை இந்த முறை பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆரம்பத்தில் அதிமுக, பாஜக மட்டுமே அதிகாரப்பூர்வமாக இணைந்திருந்தன. இருப்பினும் சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜான் பாண்டியன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அதை விட முக்கியமாக டிடிவி தினகரனின் அமமுகவும் வந்து இணைந்து விட்டது.
அதன் பின்னர் மதுராந்தகத்தில் கடந்த ஜனவரி 23ம்தேதி நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து மேடையேறினர். பிரதமர் மோடியின் அன்றைய பேச்சும் பரபரப்பைக் கூட்டியது. குறிப்பாக அவரது டபுள் என்ஜின் பேச்சு விவாதத்தையும் கிளப்பியது.
அது டபுள் என்ஜின் அல்ல, டப்பா என்ஜின் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். எங்களோடதுதான் டாப் என்ஜின் என்று தவெக தலைவர் விஜய் அதிரடியாக பதிலடி கொடுத்தார். அவருக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முதல்ல விஜய்க்கு என்ஜினே கிடையாதே என்று கலாய்த்தார். இப்படி பிரமதரின் பேச்சை வைத்து விவாதங்களும் அனல் கக்கின.
இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரப் போகிறாராம். இந்த முறை தென் மாவட்டங்களில் முக்கிய நகரமான மதுரைக்கு அவர் வருவதாக சொல்கிறார்கள். பிப்ரவரி 28ம் தேதி பிரதமர் மோடியின் கூட்டம் நடைபெறவுள்ளதாம். திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்ந்து அனல் பரப்பியபடி உள்ள நிலையில் பிரதமர் மோடி மதுரை வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் மதுரை வருகைக்குப் பின்னர் தென் மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாகும் என்று தெரிகிறது. பிரதமர் மதுரை வரும்போது அந்த மேடையில் புதிதாக சில கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.