பிப்ரவரி 28ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!
சென்னை: திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும். பிப்ரவரி 28ம் தேதிக்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே உட்கட்சி பூசல் பல நாட்களாக நிலவி வருகிறது. தற்போது இந்த உட்கட்சி பூசல் உச்சகட்டைத்தை எட்டியுள்ளது. அன்புமணி ராமதாஸ் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட தயாராகி வருகிறார். இந்நிலையில், ராமதாஸ் அதிமுகவில் சேர வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம். சரி திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளதா என்றால், அங்கு ஏற்கனவே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
பாமக திமுக கூட்டணியில் சேர்ந்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என விசிக தலைவர் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ராமதாஸ் எந்த கூட்டணியில் இணைய உள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் பொரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, டாக்டர் ராமதாஸ் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் இன்று காலை தொடங்கியுள்ள கூட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும். பிப்ரவரி 28ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.